புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (10:33 IST)

தொடரும் சம்பள பாக்கி பிரச்சனை… திரைக்கதை ஆலோசகர் ‘கருந்தேள்’ ராஜேஷின் ஆதங்க பதிவு

திரைக்கதை ஆலோசகரும், திரைக்கதை எழுத்தாளருமான கருந்தேள் ராஜேஷின் முகநூல் பதிவு ஒன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு திரைக்கதை ஆலோசகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி வருபவர். ‘சூதுகவ்வும்’,  ‘இன்று நேற்று நாளை’,  ‘அயலான்’ மற்றும் ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ உள்ளிட்ட பல படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் அவர் பங்காற்றியுள்ளார். திரைக்கதை சம்மந்தமான ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ மற்றும் ‘திரைக்கதை எனும் பூனை’ உள்ளிட்ட சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இது தவிர திரைக்கதை சம்மந்தமான பல பயிற்சி வகுப்புகளையும் அவர் எடுத்து வருகிறார். இதனால் சமூகவலைதளங்களில் இவரை சினிமா சார்ந்தவர்கள் அதிகளவில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் பலர் தன்னிடம் வேலை வாங்கிக் கொண்டு சம்பளம் முழுவதும் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக இவர் பகிர்ந்த பதிவு சலசலப்புகளை ஏற்படுத்தியது. அதையடுத்து இப்போது அவர் மீண்டும் அதுபோல ஒரு பிரச்சனையைப் பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 
கருந்தேள் ராஜேஷின் முகநூல் பதிவு…

சம்பள பாக்கி சிறுகதை

2018ல் கருந்தேள் ஒரு மிகப்பிரபல நடன இயக்குநரின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தான். அவர்தான் அழைத்தது. அவரது தம்பியை சினிமாவில் அறிமுகப்படுத்தவேண்டும் என்று, அந்த நடன இயக்குநர், கருந்தேளை, அதற்கேற்ற கதை வைத்திருந்த ஒரு புதிய இயக்குநரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் புதிய இயக்குநர், லோகிததாசிடம் வேலை செய்தவர். அவரிடம் இருந்த கதை, மிக நல்ல கதை.  கருந்தேள், அவருடன் நடன இயக்குநரின் சார்பாக அமர்ந்து, சென்னையில் தினமும் விவாதம் செய்தான். அந்த இயக்குநர் சிறந்த உழைப்பாளி. கதை ரெடியானது.

ஆனால் நடன இயக்குநர் சார்பில், கருந்தேள் வாங்கிய அட்வான்ஸ் 30 சதவிகிதமே. வழக்கமாக முழுப்பணத்துக்கு உத்தரவாதம் இல்லாமல் கருந்தேள் சினிமாவுக்கு செல்ல மாட்டான். ஆனால் இதற்குக் காரணம், அப்போது தமிழின் பிரம்மாண்ட இயக்குநராக இருந்தவரிடம் மேனேஜராகப் பணிபுரிந்தவர். அவர் கோயமுத்தூர்க்காரர். அவர் பேர் ஜமல் என்று வைத்துக்கொள்வோம்.  அவர்தான் கருந்தேளிடம் பேசி, நீங்கள்தான் இந்தப் படத்தில் வேலை செய்யவேண்டும் என்று அழைத்தவர். அவர் அப்போது பிரம்மாண்ட இயக்குநரிடம் இருந்து விலகி, நடன இயக்குநரிடம் பணிபுரிந்துகொண்டிருந்தார். எனவே கருந்தேள் அவரை நம்பி இந்தப் படத்தில் வேலை செய்தான். ஆனால் இறுதியில், அந்த இயக்குநரிடம் முழுத் திரைக்கதை ரெடியான போதும், பிரம்மாண்ட இயக்குநரின் மேனேஜரால் கருந்தேளின் முழுச் சம்பளமும் வாங்கித் தர முடியவில்லை (அல்லது அவர் அதற்கான எந்த வேலையும் செய்யவே இல்லை), இன்றும் 70% கருந்தேளின் சம்பளம் பாக்கி. அந்த நடன இயக்குநர், மக்களுக்கு உதவி செய்வதில் பெயர் போனவர். அவருக்கு இன்றுமே இந்த விஷயம் தெரியுமா தெரியாதா என்றே கருந்தேளுக்குத் தெரியாது.

காரணம், அவரிடமே நேராகப் பேசுகையில் சம்பள பாக்கி பற்றிக் கருந்தேள் பேசி இருக்கிறான். அவர், வேறு ஒரு மேனேஜரிடம் (நடன இயக்குநரின் குருநாதர்) பேசச் சொன்னார்.  குருநாத மேனேஜரோ அந்த நடன இயக்குநரிடமே பேசச் சொன்னார். ஒரு லெவலுக்கு மேல் இது கருந்தேளுக்கு சரிவரவில்லை. புக் செய்த ஜமல் மேனேஜர் அல்லவா பணம் வாங்கித் தரவேண்டும்?. இதற்குப் பின் அந்த மேனேஜர் ஜமல் பாரதீயுடு 2 வில் பிரம்மாண்ட இயக்குநரிடம் வேலை செய்யச் சென்றுவிட்டார். ஆனால் மிகப்பெரிய விபத்தின் காரணமாக அந்தப் படமும் நின்றுவிட்டது.

 
சினிமா மட்டுமல்ல. எந்தத் தொழிலாக இருந்தாலும், வேலையை முடித்தபின் சம்பளம் வந்தே ஆகவேண்டும் அல்லவா? அதுதானே முறை? இதுதான் கருந்தேளின் பாலிசி. இந்தச் சம்பவம் நடந்தபின் கருந்தேளுக்கு மிகப்பெரிய சந்தேகம், அந்த நடன இயக்குநருக்கு இது தெரியுமா தெரியாதா என்பதே. தெரிந்தால் மகிழ்ச்சி. சம்பள பாக்கியை 2018ல் கொடுப்பதற்கும், 2022ல் கொடுப்பதற்கும் inflation உட்பட வித்தியாசம் உண்டு. அவரை அதற்குப் பின் கருந்தேள் சந்திக்கவே இல்லை. நேரில் சந்தித்தால் இதைப்பற்றி அவசியம் விரிவாகப் பேசுவான்.

(தொடரும்)

பி.கு - இதன்பின் கருந்தேள் உஷாராகிவிட்டான். முழு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதில்லை .