சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!
தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. எப்படி ரஜினி கமல், கவுண்டமணி & செந்தில் மற்றும் இளையராஜா ஆகியோர் படத்தின் வியாபாரத்தை தீர்மானித்தார்களோ அதுபோல சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் படத்தின் வியாபாரத்தை நிர்ணயித்தது. கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை சிஙகக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா 1995 ஆம் ஆண்டு தன்னுடைய தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கானக் காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை ஒட்டி ஏற்கனவே தி டர்ட்டி பிக்சர் என்ற படம் இந்தியில் உருவாகி அதில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இப்போது தமிழிலும் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சில்க் ஸ்மிதாவுடன் நெருக்கமாக பழகியவரான இயக்குனர் ஜி எம் குமார் “சில்க் ஸ்மிதா மிகவும் வெகுளியானவர். திரையில் பார்த்தது போல அவர் நிஜ வாழ்க்கையில் கிடையாது. அவரோடு பழகிவிட்டால் நமக்கு அவர் மேல் பாலியல் ரீதியான எண்ணம் வராது. அவர் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல துணைவரை தேடினார். அது அவருக்குக் கிடைக்கவேயில்லை” என சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.