‘நீங்கள் சொன்னது தடுமாற்ற சொற்கள்...’ மணிரத்னம் கருத்துக்கு சீனு ராமசாமி ட்வீட்!
மறைந்த எழுத்தாளர் கல்கி 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ரோஜா திரைப்படத்துக்கு பிறகு முதல் முறையாக இயக்குனர் மணிரத்னம் வைரமுத்து பாடல் எழுதாமல் இயக்கியுள்ளார். இதற்கு வைரமுத்து மீது எழுந்த மீ டு குற்றச்சாட்டுகளே காரணம் என்று கிசுகிசுக்கள் எழுந்தன. இந்நிலையில் இதைப் பற்றி இயக்குனர் மணிரத்னத்திடம் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.
அதற்கு மணிரத்னம் “வைரமுத்துவோடு ஏற்கனவே பல படங்களில் பணியாற்றிவிட்டோம். அவரின் பல கவிதைகளை ரஹ்மானோடு இணைந்து பாடல்கள் ஆக்கியுள்ளோம். அவை எல்லாமே ஹிட் ஆகின. புதிய திறமையாளர்களோடு ஒரு படம் பண்ணலாம் என்றுதான் இந்த முடிவு” எனக் கூறி இருந்தார்.
மணிரத்னத்தின் இந்த பதிலை வைத்து இயக்குனர் சீனு ராமசாமி பதிவு செய்த ட்வீட் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் ”புதியவர்கள் வருவர் போவர் ஆனால் நீங்க பீஷ்மர் #ManiRatnam sir நீங்கள் நட்டது விதை விருச்சமாகும், புதிய கவிஞருக்கு வாழ்த்துகள் ஆனால் "வைரமுத்துவை விட என நீங்கள் திறமை சிறுமை செய்தது கோவலன் கொலை தடுமாற்ற சொற்கள். உங்கள் 'இருவர்' காலம் கண் மை அல்ல தடம்..” எனக் கூறியுள்ளார்.