1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (18:57 IST)

“என் முகமெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்குமா?” - சரண்யா பொன்வண்ணனிடம் கேட்ட விஜய் சேதுபதி

‘என் முகமெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்குமா?’ என விஜய் சேதுபதி தன்னிடம் கேட்டதாக சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
 
விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான படம் ‘தென்மேற்குப் பருவக்காற்று’. இந்தப் படத்தில் அவருடைய அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. சீனு ராமசாமி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
 
இந்நிலையில், 8 வருடங்கள் கழித்து மறுபடியும் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன். கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரண்யா பொன்வண்ணன், “விஜய் சேதுபதியுடன் நான் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நடிக்கும்போது, என்னிடம் வந்து, ‘இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்குமா அம்மா?’ எனக் கேட்பார். அப்போது, ‘உனக்கென்னப்பா குறை? பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளாக வருவாய்’ என்று வாழ்த்தினேன்.
 
ஆனால், இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய், தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படிப் பெருமிதமாகப் பார்த்து கர்வப்பட்டுக் கொள்வாரோ, அதேபோல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்றார்.