சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளே ஆகிய இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிகழ்வில் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர். சச்சின் மற்றும் காம்ப்ளே ஆகிய இருவரின் சிறுவயது பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேக்கர் அவர்களின் நினைவுருவ சிலை திறப்பு விழா மும்பையில் நேற்று நடந்தது.
அதில் சிறப்பு விருந்தினராக சச்சின் மற்றும் காம்ப்ளி கலந்துகொண்டனர். அச்ரேக்கரின் பயிற்சியின் கீழ்தான் இருவரும் கிரிக்கெட்டராக உருவானார்கள். வரலாற்று சாதனைப் படைத்த சச்சின் –காம்ப்ளே 664 பார்ட்னர்ஷிப் இன்னிங்ஸ் அச்ரேக்கர் பயிற்சியின் கீழ் அடிக்கப்பட்டதுதான். சச்சின் கிரிக்கெட்டராக உச்சத்தைத் தொட்டார். ஆனால் காம்ப்ளே மிகச்சிறப்பான தொடக்கத்தைப் பெற்றும் பெரியளவில் செல்லமுடியவில்லை.
இந்நிலையில் உடல்நலமில்லாத காம்ப்ளேவை நிகழ்ச்சியில் சந்தித்த சச்சின், அவரருகே சென்று கைகொடுத்து அன்பைப் பரிமாறிக் கொண்டார். சச்சினைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட காம்ப்ளே அவர் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். சில நிமிடங்கள் கழித்து சச்சின் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தபோதும் காம்ப்ளே அவரின் கைகளை விடாமல் பற்றிக் கொண்டார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.