டீசரை பாத்துட்டு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்! – எஸ்.வி.சேகர் கண்டனம்!
சமீபத்தில் வெளியாகவிருக்கும் காட்மேன் வெப்சிரீஸ் டீசர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “காட்மேன்” என்ற வெப் சிரீஸ் வெளியாக உள்ளது. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இந்த இணைய தொடரின் டீசரில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜக தமிழக தலைவர் முருகன் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் இந்த தொடரை வெளியிட அனுமதிக்க கூடாது என்று கூறி வருகின்றனர். வெப் சீரிஸ்களுக்கும் சென்சார் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என சட்டம் அமைக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய எஸ்.வி.சேகர் ”இந்த காட்மேன் இணையத்தொடரின் டீசரை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானேன், இந்த தொடர் ஜூன் 12 வெளியாவதாக விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இந்த தொடர் வெளியானால் அது நாட்டில் பல்வேறு கலவரங்கள் ஏற்பட காரணமாக அமையும். அதில் ஒருவர் “என்னை சுத்தி இருக்க பிராமணர்கள் எல்லாம் அயோக்கியனுங்க” என வசனம் பேசுகிறார். இதுபோன்ற தொடரை எடுத்த இயக்குனர், தயாரிப்பாளரை கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.