ஒவ்வொரு மொழியிலும் பெரிய படம்… பின் வாங்கும் ஆர் ஆர் ஆர்!
ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் ஜனவரி 7 ஆம் தேதி இருக்கும் என சொல்லப்பட்டது.
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த படத்தை இந்த ஆண்டு ஜனவரி மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அக்டோபர் மாதம் ரிலிஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் பட ரிலீஸ் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யப்படலாம் என சொல்லப்பட்டது.
ஆனால் அப்போது தெலுங்கில் மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபட்டா , பிரபாஸின் ராதே ஷ்யாம், தமிழில் அஜித்தின் வலிமை ஆகிய படங்கள் ரிலிஸுக்கு தயாராக உள்ளன. இதனால் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழலாம் என்பதால் மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.