ஒரு காலத்தில் ரஜினிக்கே போட்டியாக இருந்தவர்… சாமான்யன் படத்தின் வசூல் இவ்வளவுதானா?
80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.
அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் குணச்சித்திர வேடங்கள் தனக்கு வந்தாலும் நடிக்க மறுத்து வந்தார். நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன் என்ற உறுதியோடு இருந்த அவர் மேதை படத்துக்குப் பிறகு தற்போது சாமான்யன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் படத்துக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
மே 23 ஆம் தேதி இந்த படம் ரிலீஸான நிலையில் படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இதுவரை படம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்ச ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ரஜினிக்கே டஃப் கொடுத்த ராமராஜனுக்கா இந்த நிலைமை என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.