வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:20 IST)

“இதுக்காகதான் அந்த படத்தையே எடுத்தேன்…” நடிகர் ராஜ்கிரணின் முகநூல் பதிவு!

சமிபமாக ஆன்லைன் சூதாட்டங்களின் மூலமாக பலர் பணத்தை இழந்து தற்கொலை வரை செல்லும் கொடுமைகள் அரங்கேறியுள்ளன.

மேலும் இந்த சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிப்பதும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணின் முகநூல் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அதில் “சீட்டாட்டம் என்பது, மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்... சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது...

சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்... இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், "எல்லாமே என் ராசா தான்" என்று, ஒரு படமே எடுத்தேன்... அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. "காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே" என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, "ஆன்லைன் ரம்மி" என்ற பெயரில், காவல் துறையைப்பற்றிய பயமில்லாமல், எல்லோரும் ஆடலாம் என்றாகி, இந்த சமூக சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன... 37 குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றன. தமிழக அரசு, இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டைத்தடுக்க சட்டம் இயற்றியும், அதை செயல் படுத்த முடியாமல், முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன..." என ராஜ் கிரண் பதிவிட்டுள்ளார்.