செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (07:55 IST)

30 ஆண்டுகளைக் கடந்த என் ராசாவின் மனசிலே… இரண்டாம் பாகம் எப்போது? - ராஜ்கிரண் அறிவிப்பு!

நடிகரும் தயாரிப்பாளரும் ஆன ராஜ்கிரண் தனது முதல் படமான என் ராஜாவின் மனசிலே படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ளதை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தியுள்ளார்.

தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து 90 களில் பிரபலமான கதாநாயகனாக இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறையவே, குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நந்தா, தவமாய் தவமிருந்து. கிரீடம் மற்றும் பாண்டவர் பூமி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரின் முதல் படமான என் ராசாவின் மனசிலே வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு அவரின் சமூகவலைதள பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் ‘ இறை அருளால்,"என் ராசாவின் மனசிலே"30 ஆண்டுகள் நிறைவுற்றது... "என் ராசாவின் மனசிலே" இரண்டாம் பாகத்தை, என் மகன் நைனார் முஹம்மது எழுதி, இயக்குகிறார். கதையை எழுதி முடித்து விட்டு,
திரைக்கதை எழுதுவதில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

வெகு விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இறை அருளால், இப்படமும் மாபெரும் வெற்றியடைய,  உங்கள் பிரார்த்தனைகளையும்,
வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.