பிதாமகன் தயாரிப்பாளருக்கு சொன்ன உதவியை செய்தாரா ரஜினிகாந்த்?
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து பல படங்களை தயாரித்து விநியோகம் செய்தவர் தயாரிப்பாளர் வி ஏ துரை. எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தியவ இவர், என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் ஆகிய படங்களை தயாரித்தார். இந்த படங்களில் பிதாமகன் தவிர மற்ற படங்கள் எவையும் வெற்றிகரமான படமாக அமையவில்லை. இதனால் தனது சொத்துகளை இழந்த துரை, ஒரு கட்டத்தில் நலிந்த தயாரிப்பாளராக காணாமல் போனார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் தான் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருந்து வாங்க காசு கூட இல்லை என்று உதவி கேட்டு பேசியுள்ளார். இதையடுத்து துரையின் நீண்டகால நண்பரான ரஜினிகாந்த் அவருக்கு உதவி செய்வதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் சினிமா துறையை சேர்ந்த சிலரும் அவருக்கு பண உதவி செய்துள்ள நிலையில், ரஜினிகாந்த் பண உதவியாக செய்யாமல், நேரடியாக மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் தான் ஏற்றுகொள்வதாகவும், பில்லை நேரடியாக தனக்கு அனுப்பிவிட சொல்லியும் கூறியுள்ளாராம். அதன் ஒரு கட்டமாக இப்போது முதல் தவணையை செலுத்தியுள்ளாராம்.