வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (08:38 IST)

‘இயக்குனர் அமீர் பேச்சில்தான் வன்முறை உள்ளது’… சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் அதிருப்தி

கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் வெகுஜனப் பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருக்கு புரியாமல் போனதாக அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அமீர் “கொட்டுக்காளி திரைப்படம் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்பட்ட படம். அதை மையநீரோட்டா சினிமாவோடு ரிலீஸ் செய்திருக்கவேக் கூடாது. அப்படி தியேட்டரில் அந்த படத்தை ரிலீஸ் செய்தது வெகுஜன ரசிகர் மேல் செய்யும் வன்முறை. அந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்திருந்தாலே போட்ட பணத்தை எடுத்திருக்கலாம். “ எனப் பேசியுள்ளார். ஒரு இயக்குனராக இருந்து கொண்டு அமீர், இப்படி ஒரு மாற்று சினிமா முயற்சியைப் பற்றி விமர்சித்திருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகெயனின் நண்பரும் மாவீரன் படத்தின் தயாரிப்பாளருமான அருண் விஷ்வா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் “ஒரு திரைப்படத்தை எந்த தேதியில் வெளியிட வேண்டும்,அதை எவ்வாறு விளம்பரம் செய்ய வேண்டும் என்பது அந்த தயாரிப்பாளரின் உரிமை! அந்த திரைப்படத்தை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் மக்களின் உரிமை! இந்த படம்தான் திரையரங்கில் வர வேண்டும்,இந்த படம் வர கூடாது! இந்த படத்துக்கூட எதுக்கு வரணும்? பெரிய படம் கூட சின்ன படம் வருவது தவறு/வன்முறை என்று சொல்லும் இயக்குனர் அமீர் சார் அவர்களின் பேச்சில்தான் உச்சபட்ச வன்முறை உள்ளது” எனக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.