1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:20 IST)

’நடிகைகளுக்குக் கல்யாணமே ஆகக் கூடாதுன்னு சிலர் ஆசைப்படுறாங்க’- கடுப்பான பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரை நடிகைகளுக்கு ஒரு புதிய பாதைய வகுத்துக் கொடுத்தவர்தான் பிரியா பவானி சங்கர். தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர்.

மேயாத மான் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையானார் பிரியா. இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதிலும் பிரியாவின் கதாபாத்திரம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் அவர் தனிப்பட்ட முறையிலும் ராசியில்லாத நடிகை என்று கேலிகளுக்கு ஆளானார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் ஹிட்டாகி அந்த அவப்பெயரை போக்கியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் சில ரசிகர்களைப் பற்றி சலிப்பான எண்ணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “சிலர் இருக்காங்க. அவங்களப் பொறுத்தவரை நடிகைகளுக்கு காதலர் இருக்கக் கூடாது. அதேப் போல கல்யாணமும் ஆகக்கூடாது. எப்போது சிங்கிளாகவே வயசாகாமல் இருக்க வேண்டும். நடிகைகளுக்குக் கல்யாணம் ஆனால் கூட அவர்களின் கணவர்கள் வேறு வழியில்லாமல்தான் நடிகையோடு வாழ்ந்துவருகிறர்கள் என்று சொல்வார்கள்” எனக் கூறியுள்ளார்.