ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (09:40 IST)

‘தீபாவளி போனஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
 
தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது முயற்சியின் மூலம் ‘தீபாவளி போனஸ்’ சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 
இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
 
அப்போது பேசிய படத்தின் நாயகன்
விக்ராந்தின்  மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ்....
 
இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஜெயபாலன் சாருக்கு நன்றி. இந்த படத்திற்காக ஆடிசன் நடந்த போது என் தந்தை மதுரைக்கு அழைத்துச் சென்றார். ஆடிசனில் கலந்துக்கொண்ட பிறகு நான் தேர்வானேன். அதன் பிறகு ஒருவாரம் அவர்களே எனக்கு நடிப்பதற்கு பயிற்சி அளித்தார்கள், மதுரை ஸ்லாங் பேச சொல்லிக் கொடுத்தார்கள். அதை நன்றாக கற்றுக்கொண்டு நன்றாக நடித்தேன், நன்றி என்றார்.
 
ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஷ் பேசுகையில்.....
 
தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சிறு முதலீட்டு படங்களை வெளியிடும் நிறுவனம் என்றும், குறைந்த திரையரங்கம் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் நிறுவனம் என்று தான் இதுவரை இருந்தது. ஊடகங்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் ஆதரவால், ‘தீபாவளி போனஸ்’ படம் மூலம் நல்ல கமர்ஷியல் படம் மற்றும் வணிக ரீதியாக பெரிய வருமாணம் ஈட்டக்கூடிய படத்தை கையாளும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எங்களிடம் வருவதற்கு ஒரு நீண்ட பயணம் தேவைப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு இந்த படம் வர வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் இயக்குநர் தவம் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு படத்தை வெளியிடும் போதும், இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து கனமான பதிவு வரும். 
 
நம்ம படம் எப்போது வரும், என்று உருக்கமாக கேட்பார். அதில் இருந்தே அவருடைய ஏக்க, தவிப்பு தெரியும். அதேபோல், இந்த படத்தின் தயாரிப்பாளர் இதுவரை எந்த விசயத்திலும் தலையிடவில்லை. கதையை கேட்டு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டார். அவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்றியிருக்கிறார்கள். தயாரிப்பாளரின் நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு அனைவரும் உண்மையாக உழைத்து இப்படி ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 
 
தீபாவளிக்கு முன்பு வெளியிடுவது, தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஒரு சூழலாக இருக்கிறது, எனவே இது தீபாவளிக்கான சரியான படமாக இருக்கும். படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும் படத்தை பாராட்டியுள்ளனர். எனவே, இந்த தீபாவளி போனஸ் எங்களுக்கு போனஸாகவே இருக்கும் என்றார்.
 
நடிகை ரித்விகா பேசுகையில்.....
 
இந்த படத்திற்காக என்னை தொலை பேசியில் தான் முதலில் தொடர்பு கொண்டார் இயக்குநர் ஜெயபால். அப்போது ஒரு ஒன்லைன் சொன்னார், அதை கேட்டதும் இந்த படம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு விசயம் கேட்டால் அது நன்றாக வரும் என்று நம் உள்ளுணர்வு சொல்லும் அல்லவா அது போல் இந்த படத்தின் கதை கேட்கும் போது இது நன்றாக இருக்கும் என்று என் உள்ளுணர்வு சொன்னது, அதனால் ஓகே சொல்லிவிட்டேன். அதன்படியே படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் தலைப்பும் ஈர்க்கும் விதமாக இருக்கிறது. 
 
இந்த படக்குழுவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நடித்தவர்களை தவிர அனைவரும் புதியவர்கள். இயக்குநர், தயாரிப்பாளர், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என அனைவரும் புதியவர்களாக இருந்தார்கள், அவர்களின் செயல் என்னை அதிகம் கோபப்பட வைக்கும். இருந்தாலும் அதை எல்லாம் சமாளித்து சிறப்பாக பணியாற்றினார்கள். என்னிடம் 22 நாட்கள் கேட்டார்கள், ஆனால் என்னுடைய பகுதியை 19 நாட்களில் முடித்து விட்டார்கள். சில தடுமாற்றங்கள் இருந்தாலும், திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை முடித்ததோடு, பின்னணி வேலைகளையும் சரியாக திட்டமிட்டு செய்து முடித்தார்கள். தவறு செய்தாலும் அதை சரி செய்துக்கொண்டு, என்னையும் சமாதானப்படுத்தி அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்ததற்காக அவர்களுக்கு நன்றி.
 
சிறிய படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஊடகங்கள் பெரிய ஆதரவு கொடுத்து பெரிய இடத்தில் கொண்டு செல்கிறார்கள், அதுபோல் எங்கள் படத்தையும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
 
இயக்குநர் ஜெயபால்.ஜெ பேசுகையில்.....
 
எனக்கு இந்த வாய்ப்பளித்த என் தயாரிப்பாளர் தீபக் சாருக்கு முதல் நன்றி. அவர் இன்று இங்கு அமர்ந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது, அவர் பிஸியான மனிதர். அவரை அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது, அந்த அளவுக்கு பிஸியானவர். அதனால் தான் மொத்த பொறுப்பையும் எங்களிடம் கொடுத்தார். அவர் முதலில் என்னிடம் சொன்னது, உங்களுக்கு நான் வாய்ப்பளிப்பது போல், கஷ்ட்டப்படுகிறவர்களுக்கு நீ வாய்ப்பளிக்க வேண்டும். உன்னை போல் சினிமாவில் சாதிக்க நினைத்து போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த படம் வாய்ப்பாக இருக்க வேண்டும், என்று கூறினார். அவரது இந்த வாய்ப்பை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் அவர், அவர் அடுத்தடுத்து படம் தயாரிக்க வேண்டும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
 
எளிய மக்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் படம் மக்களுடன் கனெக்ட் செய்யும் என்று நம்புகிறேன். இனி உங்களிடம் தான் இருக்கிறது. பல படங்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் ஊடகங்கள் எங்கள் தீபாவளி போனஸ் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.