ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (13:16 IST)

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. படத்தில் நடிகர் தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராகக் காட்டப்பட்டார். அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது அவருக்கு விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாடல்’ ஓடவிடப்படும். அதே போல அவரின் வீட்டு சுவரில் விஜயகாந்த் ஓவியமும் இடம்பெற்றிருக்கும்.

இந்த காட்சிகள் எல்லாம் விஜயகாந்த் ரசிகர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது. படத்தில் விஜயகாந்த் ரெஃப்ரன்ஸ் வரும் இடங்களில் எல்லாம் தியேட்டர்களில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணங்களை இயக்குனர் கொடுத்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இதுபற்றி பேசும்போது “விஜயகாந்த் பாடல்களையோ, அவரின் புகைப்படங்களையோ படங்களில் பயன்படுத்தினால் நாங்கள் காப்புரிமை எல்லாம் கேட்கமாட்டோம். ஏனென்றால் கேப்டன் எங்கள் சொத்தல்ல. அவர் மக்களின் சொத்து” எனக் கூறியுள்ளார்.