‘இதனால்தான் பிரசாந்த் ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்’ – அந்தகன் நிகழ்வில் தியாகராஜன் பகிர்ந்த தகவல்!
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நம்பி எதிர்பார்த்திருக்கிறார்.
அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் அந்தகன் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள படத்தின் இயக்குனரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் “பிரசாந்தின் ரசிகர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அது பிரசாந்தை மனதளவில் பாதித்தது. அதனால்தான் அவர் ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் சென்று 5000 ஹெல்மெட்களை இலவசமாக வழங்கினார்” எனப் பேசியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் பிரசாந்த் படம் பொறித்த ஹெல்மெட்களை ரசிகர்களுக்கு பிரசாந்தும் தியாகராஜனும் இலவசமாக வழங்கினர்.
சமீபத்தில் தனியார் இணையதள சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக அவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது சுவாரஸ்யமான நகைமுரண்.