செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 13 டிசம்பர் 2018 (12:10 IST)

சினிமா பாணியில் நாடகமாடிய பவர்ஸ்டார் – போலிஸ் அதிர்ச்சி

சினிமாப் பாணியில் தன்னை கடத்தி விட்டதாக நாடகமாடிய பவர்ஸ்டார் சீனிவாசனால் போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.அக்குபஞ்சர் மருத்துவரான இவர் ஒரு சில படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்..

இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லை எனவும், பல இடங்களில் தேடியும் தனது கணவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது  மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சீனிவாசன் மீது நிறைய மோசடி புகார்கள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கி சிறைக்கும் சென்றிருக்கிறார்.அதில் சம்பந்தப்பட்ட யாரேனும் சீனிவாசனை கடத்திவிட்டார்களா அல்லது அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.இதற்கிடையில் பவர்ஸ்டாரின் மனைவி ஜூலியும் மாயமானார். இதுகுறித்து பேட்டியளித்த சீனிவாசனின் மகள் தன் தாய், தந்தை இருவரும் ஊட்டியில் இருப்பதாகவும், அவர்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறினார்.
 

இந்தக் கடத்தல் சம்பவத்தில் திடீர் திருப்பமாக கடந்த 9-ம் தேதியன்றே ஊட்டியில் இருந்து திரும்பிய பவர் ஸ்டார் சீனிவாசன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ’பெங்களூரு தொழிலதிபர் ஆலம் என்பவரிடம் கடனாக  பணம் வாங்கியிருந்தேன். அந்த பணத்துக்காக அவர், என்னை அடியாள் மூலம் ஊட்டிக்கு கடத்தி சென்று , சித்ரவதை செய்தார். என் மனைவி பெயரில் ஊட்டியில் உள்ள ரூ.1 கோடி நிலத்தை எழுதித் தருவதாக கூறினேன். அதன் பேரில் என் மனைவியை மிரட்டி ஊட்டிக்கு வரவழைத்து அறையில் அடைத்து வைத்தனர். நான் தப்பி வந்துவிட்டேன். ஆலம்மிடம் இருந்து என் மனைவியை மீட்டுத் தாருங்கள்’.

இதுகுறித்து ஆலம் என்பவரைப் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர் பதிலளித்துள்ளார். அவர் போலிஸாரிடம் ‘என்னுடையப் பணத்தை நான் திருப்பிக் கேட்ட போது ஊட்டியில் உள்ள நிலத்தை எழுதி தருவதாக கூறி சீனிவாசன் அழைத்ததால்தான் ஊட்டிக்கு வந் தேன். ஆனால். சொன்னபடி சீனிவாசன்  ஊட்டிக்கு வராததால் விசாரித்துவர ஆட்களை அனுப்பினேன். நிலம் தனது மனைவி பெயரில் இருப்பதாக சீனிவாசன் கூறியதால், அவரையும் ஊட்டிக்கு வரச் சொன்னோம். நாங்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை. தனது மகள் மூலம் எங்கள் மீது புகாரும் கொடுக்க வைத்துள்ளார். திட்டமிட்டு எங்களை சிக்கவைக்க இப்படி நாடகமாடியுள்ளார்’. எனக் கூறியுள்ளார்.

போலிஸ் விசாரணையில் இது உண்மை என்பதை பவர்ஸ்டார் சீனிவாசனும் ஒத்துக் கொண்டுள்ளார். இதனால் எரிச்சலான போலிஸார் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.