பொன்னியில் செல்வன் திரைப்படத்தின் நிலை என்ன? மணிரத்னம் ஆலோசனை!
பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்கான திட்டங்களை வகுத்த போது கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் படப்பிடிப்பு தடங்கல் ஆகியுள்ள நிலையில் மீண்டும் எப்போது படப்பிடிப்பை தொடங்குவது என்று மணிரத்னம் தனது குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜூலை மாதத்தில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றும் ஒரு வேளை வெளிப்புற படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்றால் ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். முதல்பாகத்தை எப்படியாவது அடுத்த ஆண்டுக்குள் ரிலிஸ் செய்யவேண்டும் என்பதால் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.