திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (17:49 IST)

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!

பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது இசை என்பது இரைச்சல்.பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகி விட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
 
ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக் என்ஜினியர்களை கவுரவிக்கும் சினிமா, இத்தகைய நல்ல கவிஞர்களுக்கும் ஒரு சூடத்தை கொளுத்தி வைத்து ஆராதிப்பதுதான் தமிழ்சினிமாவின் தனிச்சிறப்பு.
 
அப்படி சமீபத்திய ஆராதனைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு, தமிழ் சினிமாவில் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் இலங்கை  கவிஞர் பொத்துவில் அஸ்மின், பாட்டு ரசிகர்களை கவனிக்க வைக்கிறார்.
 
தமிழ்சினிமாவில் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களில் சமூக வலைத்தளத்தள பக்கங்களில்  உலகெங்கும் இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் விரல்விட்டு எண்ணக்கூடிய கவிஞர்களில் அஸ்மினும் ஒருவர்.
 
இளம் வயதில் மொழியை ஆளத் தெரிந்தவராக திகழ்கிறார் ஈழத்து இளங்கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் யாத்துள்ள கவிதைகளில் ஒரு தேர்ந்த கவிஞனுக்குரிய திறன் தெரிகிறது.
 
பல்வேறு பாடுபொருள்களில் அவர் பாடியுள்ள கவிதைகளில் கருத்துச்செறிவும் கற்பனைவளமும் காணப்படுகின்றன.
 
 'பொறுமை' எனும் அஸ்மினின் கவியரங்க கவிதை அவர் மரபில் பெற்றுள்ள ஆழ்ந்த பயிற்சிக்கும் மொழி செப்பத்திற்கும் அடையாளமாக விளங்குகிறது.
 
இலங்கையில் தமிழ் இதழியல் துறையிலும் ஊடகத்துறையிலும் திரைப்படத் துறையிலும் தடம்பதித்து வரும் தம்பி பொத்துவில் அஸ்மின் காலத்தால் சிறந்த கவிஞராக செதுக்கப்படுவார்
 
என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்த்தப்பட்டவர்   அஸ்மின்.
 
மரபுக்கவிஞர்,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்,
நிகழ்ச்சி தொகுப்பாளர், நூலாசிரியர்,பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.
 
விஜய் ஆண்டனி "நான்" திரைப்படத்தில் பாடலாசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு உலகளாவிய ரீதியாக நடத்திய பாடலியற்றும் போட்டியில் இருபதாயிரம் போட்டியாளர்கள் மத்தியில் பாடல் எழுதி வெற்றி பெற்று "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
 
"இலங்கை என்தாய் நாடு இந்தியா என் தந்தை நாடு" என்று உரத்துக்கூறும் அஸ்மினின் பூர்வீகம்  ராமநாதபுரம் தேவிப்பட்டினம்.
 
இவர் எழுதிய "ஐயோசாமி நீ எனக்கு வேணாம்" பாடல் இலங்கையில் உருவாக்கப்பட்ட  பாடல்களில் 
6 கோடிக்கும் அதிகமான  பார்வைகளைப் பெற்று "மக்கள் விருது" பெற்ற முதல் தமிழ் பாடலாகும்.
 
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு இவர் எழுதிய "வானே இடிந்ததம்மா" இரங்கல் பாடல் 
அவர் அரசியல் எதிரிகளையும் கண்ணீரில் நனையவைத்தது.
 
அவருடைய சமாதியில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக அப்பாடல் ஒலித்தது. அப்போது போயஸ்கார்டன் வரவழைக்கப்பட்ட அஸ்மின் சசிகலாவால் பாராட்டப்பட்டார்.
 
கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்து அண்மையில் வெளிவந்த  "கலைஞர் 100 கவிதைகள் 100" கவிதை தொகுப்பிலும் இவர் எழுதிய  "திருக்குவளை சூரியன்" கவிதை இடம்பெற்றுள்ளது.
 
கோச்சடையான், அண்ணாத்த,
விசுவாசம் படங்கள் வெளிவந்த போது அஸ்மின் எழுதிய புரோமோ பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைராலாகின.
 
பாடும் நிலா எஸ்.பி.பி மறைவுக்கு இலங்கை தமிழ் கலைஞர்கள் சமர்ப்பித்த "எழுந்துவா இசையே" பாடலையும் இவரே எழுதினார்.
 
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்தபோது வர்சன் இசையில் இவர் எழுதி்ய "போங்கடா நாங்க பொங்கலடா" பாடல்   உழவர்களின் வலியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது.
 
இலங்கையில் அரசியல் புரட்சி வெடித்தபோது இயக்குனர் ,நடிகர் டி.ராஜேந்தர் அவர்கள் பாடி வெளியிட்ட "நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க" பாடல் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று அந்த போராட்டக்களத்தில் ஒரு போர் முரசாக ஒலித்தது அந்த பாடலை எழுதி டி.ஆரிடமே வாழ்த்துப்பெற்றவர் பொத்துவில் அஸ்மின்.
 
இருபத்தேழு ஆண்டுகளாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் அஸ்மின்  விடைதேடும் வினாக்கள்(2001),
விடியலின் ராகங்கள்(2002), பாம்புகள் குளிக்கும் நதி (2013) ஆகிய கவிதை நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார்.
 
தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழக மாணவி செல்வி.தி.கெளசல்யா தனது முதுகலை பட்டத்துக்காக "பொத்துவில் அஸ்மின் கவிதைகளில் இயற்கை வர்ணனைகளும் சமுதாய கூறுகளும்" என்ற தலைப்பில் இவர் கவிதைகளை ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார்.
 
2003ஆம் ஆண்டு இலங்கை பேராதெனியா பல்கலைக்கழகம் நடத்திய அகில இலங்கை மட்ட  கவிதைப்போட்டியில் "தங்கம்பதக்கம்" பெற்ற  அஸ்மின் இரண்டு முறை இலங்கை ஜனாதிபதி கரங்களால் விருது பெற்றவர். 
 
இவரது கலை,இலக்கிய, ஊடகப்பணியை பாராட்டி இலங்கை அரசு 2019 ஆம் ஆண்டு "கலைச்சுடர்" என்ற பட்டம் வழங்கி கெளரவித்தது.
அதே ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற உலக கவிஞர் மாநாட்டில்  கம்போடியா கலை,கலாச்சார அமைச்சினால் சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது வழங்கி அஸ்மின் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
 
,"கவிஞர்களின் கவிஞர்" என வர்ணிக்கப்படும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில்
 மலேசியா பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கவியரங்கில் கவிதைபாடி கவிக்கோவால் பாராட்டுப்பெற்றவர் அஸ்மின்.
 
இவரது "தட்டாதே திறந்து கிடக்கிறது"  கவிதையினை இயக்குனர்கள் லிங்குசாமி,ஏ.வெங்கடேஸ்,ராசய்யா கண்ணன் ஆகியோரும் பலமுறை விதந்து பாராட்டி உள்ளனர்.
 
ராடர்ன் தயாரிப்பில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "ஜமீலா" , DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "தாயம்மா குடும்பத்தார்" ஆகிய நெடுந்தொடர்களின் பாடல்களையும் அழகுத் தமிழில் அஸ்மின்  எழுதியுள்ளார்.
 
ஜிப்ரான் இசையில் "அமரகாவியம்" படத்தில் அஸ்மின் எழுதிய "தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே"  பாடல், சிறந்த பாடலாசிரியருக்கான 'எடிசன்' விருதினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.
 
தாஜ்நூர் இசையில்  "சண்டாளனே",
ஸ்ரீகாந்த் தேவா இசையில் "முத்து முத்து கருவாயா" ,நீ எத்தன பேரகொன்னிருக்க முட்டக்கண்ணால ஆகிய பாடல்கள் பல மில்லியன் ஹிட்களைப் பெற்ற இவரது பாடல்களாகும்.
 
இன்னும் தலைப்பு வைக்காத பல படங்களில் பிஸியா பாடல் எழுதிக்கொண்டிருக்கும் பொத்துவில் அஸ்மின் தமிழ் சினிமா பாடல்களில் புதிய மாற்றத்தை உருவாக்குவாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…