முதல் நாள் கூட்டமேமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை.. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன்..!
‘டீன்ஸ்’ படத்திற்கு முதல் நாள் கூட்டமே இல்லை என்றும் அடுத்த நாள் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 12ஆம் தேதி கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2’ மற்றும் பார்த்திபன் நடித்த ‘டீன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. ’இந்தியன் 2’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் பார்த்திபன் எப்படி தைரியமாக தன்னுடைய சின்ன பட்ஜெட் படத்தை வெளியிடுகிறார் என்ற ஆச்சரியம் திரையுலகினர் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததை அடுத்து இன்று முதல் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களும் காத்தாடி வருகின்றன. ஆனால் ‘டீன்ஸ்’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து இந்த படத்திற்கு தியேட்டர்கள் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: நான் சற்று உணர்ச்சி வசப்பட்டவன்தான்! என் கண்ணீர் மழைத்துளி போல் தூய்மையானது! நேற்று 'டீன்ஸ்’ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது. வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை. எத்தனை ஸ்க்ரீன்ஸ்? எவ்வளவு வசூல்? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை. போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.
கோடிகளை என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை. பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப்படுத்துகிறது. தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி’ என கூறியுள்ளார்.
Edited by Siva