சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (16:45 IST)

பார்க்கிங் படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா?

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

நகர்ப்புறங்களில் இந்த படத்துக்கு நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் என்னென்ன முடிவுகள் எடுக்கிறார்கள், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் இருவரையும் பாதிக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொன்ன படமாக அமைந்தது பார்க்கிங்.

இந்த படம் ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பு மொழி தாண்டியும் கிடைத்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை 5 மொழிகளில் ரீமேக் செய்யப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு வெளிநாட்டு மொழி ரீமேக்கும் அடக்கம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதை ஆஸ்கர் விருது வழங்கும் அகாடெமி அமைப்பு தங்கள் நூலகத்துக்காக தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த படத்துக்கு ‘நோ பார்க்கிங்’ என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.