20 ஆண்டுகளை கடந்த அஜித்தின் படம் – பி சி ஸ்ரீராம் நெகிழ்ச்சி !
முகவரி படத்தில் அஜித் மற்றும் ரகுவரன்
அஜித் நடிப்பில் வெளியான முகவரித் திரைப்படம் நேற்றோடு 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
அஜித், ஜோதிகா, ரகுவரன், கே விஸ்வநாத் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் முகவரி. இந்த திரைப்படத்தை வி இசட் துரை இயக்க பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினார். தேவா இசையில் பாடல்களை வைரமுத்து எழுத படத்தின் வசனத்தை பாலகுமாரன் எழுதினார். திரையிடலின் மெஹா ஹிட்டாகவில்லை என்றாலும் அதன் பின்னான நாட்களில் இந்த படம் வெகுவாக ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.
அதற்கு முக்கியக் காரணம் அஜித் கடைசியாக நடித்த மென்மையான கதையம்சம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. அதன் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் 20 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பதிவுகளைப் பகிர தன் பங்குக்கு தானும் ஒரு பதிவை போட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம்.
அவரது டிவிட்டில் ‘முகவரி' திரைப்படம் இருபது வருடங்களுக்கு முன் வெளியானது. படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே, இயக்குநர் துரையின் திரைக்கதையும், எல்லா நடிகர்களுடைய அற்புதமான நடிப்பும் அதை என்றும் மறக்க முடியாத அனுபவமாக்கியது.
இன்றுவரை படத்தை சமூக ஊடகங்களில் நினைவுகூர்வதால் முகவரி என்றும் பிடித்த படமாக மாறியது. அதற்கு நன்றி. வாழ்த்துகள் துரை. ரகுவரன், கே விஸ்வநாத் ஆகியோரின் நடிப்போடு அஜித், ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது’ எனத் தெரிவித்துள்ளார்.