சந்திரபோஸுடன் ராணுவ பயிற்சியில் முத்துராமலிங்க தேவர்?? – சர்ச்சையான “தேசிய தலைவர்” பட ஸ்டில்!
முத்துராமலிங்க தேவர் குறித்த வரலாற்று படமான “தேசிய தலைவர்” படத்தில் இடம்பெற்றுள்ள சுபாஷ் சந்திரபோஸ் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவராகவும், தென் தமிழகத்தின் ஏராளமான சமூக மக்களின் தலைவராகவும் விளங்கி வருபவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரது வாழ்க்கையை படமாக இயக்க பல காலமாக முயற்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஆர்.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் பஷீர் நடிக்க “தேசிய தலைவர்” என்ற பெயரில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை படமாகியுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் முத்துராமலிங்க தேவரும் மிலிட்டரி உடையில் சல்யூட் அடித்தபடி நிற்பதாக உள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸின் தீவிரவாத கொள்கையை முழுதாக ஆதரித்தவர் முத்துராமலிங்க தேவர்.
முன்னர் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸில் இருந்தபோது அவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்மொழிந்து வெற்றி பெற செய்தவர்களில் முக்கியமானவர் முத்துராமலிங்க தேவர். மேலும் சுபாஷ் சந்திரபோஸ் ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை தொடங்கியபோது அதில் இணைந்து செயல்பட்டார் முத்துராமலிங்க தேவர். சுபாஷ் சந்திரபோஸின் ஆசாத் ராணுவத்தில் இணைய தந்து சமூக இளைஞர்களை முத்துராமலிங்க தேவர் ஊக்குவித்ததாகவும் வரலாற்று தகவல்கள் உண்டு.
எனினும் அவர் ஆசாத் ராணுவத்தில் இணைந்து சுபாஷ் சந்திரபோஸுடன் பணியாற்றியதாக தகவல்கள் இல்லை. அதனால் மிலிட்டரி உடையில் சுபாஷ் சந்திரபோஸுடன் முத்துராமலிங்க தேவர் இருக்கும் இந்த புகைப்படம் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சுபாஷ் சந்திரபோஸுடன் தேவருக்கு இருந்த நட்பை உணர்த்துவதற்காகவும், படத்தின் போஸ்டர்களுக்காகவும் எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்றும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Edit by Prasanth.K