செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (08:02 IST)

இசைக்கலைஞர் சந்திரசேகர் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

இசைஞானி இளையராஜாவின் எவர்க்ரீன் கிளாசிக் ஹிட் பாடலான இளைய நிலா பொழிகிறதே உள்ளிட்ட ஏராளமான பாடலுக்கு கிட்டார் வாசித்தவர் R சந்திரசேகர். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர் பிரபல இசையமைப்பாளர் டி ராஜேந்தரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புகளில் பெருமளவில் பணியாற்றியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் பல்வேறு விளம்பரப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது இவரின் திடீர் மரணம், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகரின் மரணம் குறித்து இயக்குனர் ‘உலக சினிமா’ பாஸ்கரன் எழுதியுள்ள முகநூல் பதிவில் “இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே என்ற பாடலுக்கு கிட்டார் வாசித்த R.சந்திரசேகர் மறைவு. எம் எஸ் விஸ்வநாதனின் 'வசந்தகால நதிகளிலே' என்ற பாடலுக்கு மவுத் ஆர்கன் வாசித்ததும் இவரே. அதே போன்று டி ராஜேந்தர் படங்களுக்கு பாடல் மற்றும் பின்னணி இசை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தவரும் இவரே.

இசையமைப்பாளர் ஆர் சந்திரசேகர் என்னுடைய விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது  மகன் சஞ்சய் மற்றும் மருமகள் மகாலட்சுமி ஆகியோரும் இசைக்கலைஞர்களே. எல்லோரும் என்னுடைய விளம்பர படத்தில் பணியாற்றியுள்ளார்கள். 1995-2000 வரை என்னுடைய விளம்பர படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு நான் உலக சினிமாவிற்கு வந்த பிறகு தொடர்பு விட்டுப் போய்விட்டது. கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலையிலிருந்து அசோக் பில்லர் போகும் வழியில் காம்தார் நகரில் அவரது இல்லம் உள்ளது. எத்தனையோ முறை அவரது இல்லம் தேடி இசையை வாங்கப் போய் இருக்கிறேன். இன்றும் வருகிறேன் சந்திரசேகரன் சார். அன்று ஒரு நாள் எனக்காக வாசித்த இளையநிலாவை கிட்டார் இசைக்கருவியில் இன்றும் வாசிப்பீர்களா.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.