1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (10:48 IST)

ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் முருகர் திரைப்படம்

முருகக் கடவுள் எப்போது யாரை ஆட்கொள்வார் என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு ஆட்கொள்ளப்பட்ட ஒருவரை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். வலதுசாரி அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் பரபரப்பாக இயங்கி வந்த ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் ஜெயம் எஸ் கே கோபி, இன்று ஒரு முழு நேர முருக பக்தர். 
 
தமிழ் கடவுளான ஆறுமுகனின் புகழை தனது இடைவிடாத செயல்பாடுகள் மூலமும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அகிலமெங்கும் பரப்பி வரும் ஜெயம் கோபியின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்தது 2023ம் ஆண்டு செப்டம்பரில் நண்பருடன் அவர் மேற்கொண்ட இமயமலை பயணம் தான். 
 
இதைத்தொடர்ந்து முருகரின் மகிமைகள் குறித்து தொடர்ந்து பேட்டிகள் அளித்து வந்த ஜெயம் கோபி, திடீரென்று ஒரு நாள் முருகர் உத்தரவிட்டதாக கூறி அரசியலில் இருந்து விலகி முழு நேர ஆன்மிகவாதியாக மாறினார். அதன் பின்னர் முருகரின் உத்தரவை ஏற்று காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத மற்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை தெய்வக் குழந்தைகள் என்று அழைத்து அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். 
 
இனிமேல் யாரும் இவர்களை ஊனமுற்றவர்கள் என்றோ மாற்றுத்திறனாளிகள் என்றோ அழைக்கக்கூடாது, தெய்வக் குழந்தைகள் என்று தான் அழைக்க வேண்டும் என முருகர் உத்தரவு கொடுத்ததாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஜெயம் கோபி.
 
ஆக்ரோஷமான அரசியல்வாதியாக செயல்பட்டு வந்த ஜெயம் கோபி இவ்வாறு அமைதியும் அன்பும் ததும்பும் ஆன்மிகவாதியாக மாறியதற்கு முருகனே காரணம் என்று அவரை சுற்றியுள்ளவர்கள் வியப்புடன் கூறுகிறார்கள். 
 
"ஆறுமுகம் அளித்திடும் அனுதினமும் ஏறுமுகம்" என்று ஒரு நேர்காணலில் இவர் சொன்ன வாசகம் இன்று டிரெண்டாகி சமூக வலைதளங்களிலும், மக்கள் பலரது வாகனங்கள் மற்றும் இல்லங்களில் ஸ்டிக்கர் வடிவிலும் இடம் பெற்று வருகிறது. 
 
இனி எப்போதும் அரசியல் இல்லை, முருகப் பணியே முழு முதல் பணி என்று கோபி கூறி வருகிறார்.முருக பக்தர்கள் பலருக்கும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களில் வாயிலாகவும் ஆன்மீக ஆலோசனைகளை இவர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 
 
18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் முருக பக்தர்களாக மாறுவதற்கு ஜெயம் கோபியும் ஒரு காரணம் என்று பலரும் கூறுகிறார்கள். 
 
கர்மா ஆராய்ச்சியாளராகவும் மாறியுள்ள ஜெயம் கோபி, கர்மவினைகள் குறித்து பேசி உள்ள காணொலிகள் வைரல் ஆகி உள்ளன. முருகர் சக்தியை தியானம் மூலம் எவ்வாறு உணர்வது என்பது குறித்து வரும் நாட்களில் மக்களிடம் ஜெயம் கோபி எடுத்துரைக்கப் போகிறார். இது மட்டுமில்லாது, தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு முருகர் குறித்த ஒரு திரைப்படத்தையும் ஜெயம் கோபி தயாரிக்க உள்ளார்.
 
ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக உள்ள இந்த திரைப்படம் முருக பக்தி குறித்த விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினர் இடம் பெரிய அளவில் எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.