சாதி கலவரத்தை தூண்டுகிறாரா மாரி செல்வராஜ்? – கர்ணன் படத்துக்கு தடைக்கோரி மனு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்துக்கு தடை கோரி நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தென் தமிழகத்தின் சாதிய பாகுபாடுகளை வெளிக்காட்டியதாக பாராட்டப்பட்டவர் மாரி செல்வராஜ். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் நெல்லையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையினர் அமைப்பு நெல்லை மாநகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் ”1991ம் ஆண்டில் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும். தென்னகத்தில் அமைதியான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த படம் சாதிய கலவரங்களை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், மணியாச்சி காவல் நிலையத்தை தாக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இது காவல்துறையின் கண்ணியத்தை கெடுப்பதாக உள்ளது “ என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.