வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:06 IST)

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து… மோகன் ஜி சமூகவலைதளத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும்… நீதிமன்றம் உத்தரவு!

கடந்த சில வாரங்களாக திருப்பதி லட்டுவில் சேர்க்கப்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டு, சர்ச்சைகள் வெடித்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அது குறித்து பேசும்போது திரௌபதி மற்றும் பகாசூரன் ஆகிய படங்களின் இயக்குனர் மோகன் ஜி ”பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன” என்ற தகவலை வெளியிட்டார்.

அவரின் இந்தக் கருத்தை அடுத்து அவர் ஆதாரப்பூர்வமற்ற வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு சம்மந்தமான விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்தபோது நீதிபதி இயக்குனர் மோகன் ஜி க்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் “வாய் சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு கருத்தையும் சொல்வதற்கு முன்னால் அதை உறுதிப்படுத்த வேண்டும். சமுகவலைதளத்தில் மன்னிப்புக் கேட்டு பதிவிடவேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.