செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:29 IST)

கவனம் பெற்ற அயலி வெப் சீரிஸ் இயக்குனரைப் பாராட்டி பரிசளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அயலி வெப் தொடர் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்துள்ளது.

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அயலி' என்ற வெப்தொடர் 8 எபிசோடுகள் கொண்டது.  இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

ட்ரைலர் மூலமாகவே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்த தொடர் கடந்த மாதம் வெளியானது. வெளியானது முதலே விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்துள்ளது இந்த தொடர். முற்போக்கான கருத்தை ஜனரஞ்சகமாக பேசியுள்ள இந்த தொடர் பெண்களை மிக அதிகமாகக் கவர்ந்துள்ளது. ஜி 5 தளத்தில் தொடர்ந்து 2 வாரங்கள் இந்திய அளவில் ட்ரண்ட்டிங்கில் இடம்பிடித்த முதல் தமிழ் வெப் சீரிஸாக அயலி அமைந்தது.

தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த தொடரின் இயக்குனர் முத்துக்குமாரை நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். மேலும் இது சம்மந்தமாக ”‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்.” எனக் கூறியுள்ளார்.