சிறுவயதில் விபத்தில் உயிர் தப்பிய மாரி செல்வராஜ்… அந்த கதையை இப்ப வாழை படமாக எடுக்கிறாரா?
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எழுத்தாளரான மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியை அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு மாமன்னன் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து மாரி செல்வராஜ் வாழை என்ற தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் என சொல்லப்படுகிறது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார்.
அந்த சிறுவர்களில் ஒருவராக மாரி செல்வராஜும் வேலை செய்துள்ளார். வாழை தார்களை ஏற்றி செல்லும் வாகனம் ஒருமுறை விபத்தில் சிக்கியபோது, அதில் பயணம் செய்த பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வாகனத்தில் இருந்த மாரி செல்வராஜ் அதில் உயிர் தப்பியவர்களில் ஒருவர். அந்த கதையைதான் இப்போது வாழை என்று அவர் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.