ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (08:01 IST)

மஞ்சும்மள் பாய்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமைக்கு கடும் போட்டி… வென்றது யார் தெரியுமா?

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மும்பையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப் பட்டு வருகிறது. இந்த படம் வட இந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றுவதில் முன்னணி ஓடிடி நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவியுள்ளது. அதில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாம். ரிலீஸுக்கு முன்னதாக இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்ற எந்த நிறுவனம் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.