புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (12:51 IST)

மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி !

பல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சிம்புவால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வல்லவன் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர்கள் தாமாகவே அவரைத் தேடிச் சென்று பின்னர் ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சிம்பு நடிப்பில் 'மாநாடு' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு திட்டமிட்டபடி வராமல் இழுத்தடித்து வந்தார். இடையில் உடல் எடையைக் குறைப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுவந்தார்.

ஆனாலும்  குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் இந்த படம் டிராப் என கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கோலிவுட்டில் பேசப்பட்டது. பேசப்பட்டது போலவே மாநாடு படத்தில் சிம்புவுக்குப் பதில் வேறு நடிகர் நடிப்பார் என தயாரிப்பாளர் அறிவித்தார். அதன் பின் சிம்புவால் தான் பாதிக்கப்பட்டது குறித்து விரிவாக நேர்காணல்களில் குறிப்பிட்டார். இதனால் சிம்புவின் இமேஜ் டேமேஜ் ஆனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்புவின் தாயார் அவர் மாநாடு படத்தில் நடிப்பார் என அறிவித்தார். கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட்டார் சிம்பு என தகவல்கள் பரவின. இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘விரைவில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும்’ என அறிவித்துள்ளார்.