வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 10 ஜனவரி 2015 (11:53 IST)

லிங்கா நஷ்டஈடு கோரி விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் - சீமான் தொடங்கி வைத்தார்

லிங்கா படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும், அதற்கு நஷ்டஈடு தர ரஜினி முயற்சி எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


 
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்தார். அத்துடன், மாலையில் போராட்டத்தை தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் முடித்து வைக்கிறார். தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் இரு கட்சிகளின் தலைவர்கள் போராட்டத்தை தொடங்கியும், முடித்தும் வைப்பதால், இது லிங்கா என்ற திரைப்படத்தின் லாப நஷ்ட பிரச்சனை என்பதைத் தாண்டி இன அரசியல் என்ற புதிய சிக்கலுக்குள் திணிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் போராட்டத்தின் காரணகர்த்தாவான திருச்சி, தஞ்சை லிங்கா பட விநியோகஸ்தர் சிங்காரவேலன் இதனை இனப் பிரச்சனையாக்கும் வேலையை முன்பே தொடங்கியிருந்தார். "லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் கர்நாடகாவைச் சேர்ந்தவர், விக்ரமின் மஜா படத்தை தயாரித்து விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி கர்நாடகாவில் ஒளிந்து கொண்டவர்.

அவரை மறுபடியும் ரஜினிதான் அழைத்து வந்தார். இதேபோல் கர்நாடகாவிலிருந்து வந்து படம் தயாரித்து, அவர்கள் சம்பாதித்துவிட்டு எங்களை நஷ்டப்படுத்தினால் நாங்கள் கர்நாடகாவில் போயா முறையிட முடியும்" என்று லிங்கா பிரச்சனையை தமிழர், கன்னடர் பிரச்சனையாக அவர் முன்னிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அரசியல் நிலைப்பாடு, சிங்காரவேலனும் அவருடன் போராட்டம் நடத்தும் பிறரும் தங்களுக்கு திரையுலகிலும், அதற்கு வெளியேயும் இருந்த குறைந்தபட்ச ஆதரவையும் காவு கொடுக்க தயாராகிவிட்டனர் என்பதையே காட்டுகிறது. அதேநேரம்,  தமிழில் அதிக தயாரிப்பாளர்கள் இருக்கையில் கர்நாடகாவிலிருந்து ரஜினி ஒரு தயாரிப்பாளரை அழைத்துவர வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மொத்தத்தில் குட்டை திட்டமிட்டு குழப்பப்பட்டிருக்கிறது.