வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (15:48 IST)

அரசியலில் இந்த நாகரிகம் பரவட்டும் – வைரமுத்து அறிவுரை

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் செல்வாக்கை கடந்த அறுபதாண்டுகளில் தேசியக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட வேறு எந்தக் கட்சியாலும் பெறமுடியவில்லை.

பெரியார் வழியில் பேரறிஞர் அண்ணா சென்ற திராவிட அரசியலில் திமுக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகத் தோன்றியது. அண்ணாவின் மறைவுக்குப் பின்,  கருணாநிதி முதல்வர் ஆனதுடன் திமுகவின் தலைவரும் ஆனார். அவர் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான எம்.ஜி,ஆரை கட்சியிலிருந்து நீக்கவே, எம்.ஜி,ஆர் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து அ.இ.அ.தி.முகவை தோற்றுவித்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அவரது மனைவி ஜானகி அக்கட்சியை நிர்வகித்து வந்த நிலையில், பின்னர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார்.

இதையடுத்து அதிமுகவினரும் திமுகவினரும் தங்கள் தலைமைக்கு விசுவாசத்தைக் காண்பிக்கவே எதிர்கட்சியை வசைப்பாடும் போக்கினைப் பின்பற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டது. இதில் பல ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அதேசமயம் அங்குள்ள முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிடத்திலும் அவர்கள் குவிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தமிழகத்திற்கு தங்கள் ஆட்சியால் வளர்ச்சி ஏற்படுத்திய

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதியின் நினைவிடத்தைப் பார்க்க வந்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.

தற்போது, கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
; கலைஞர் நினைவிடத்தில்

அன்பு காட்டிய அ.இ.அ.தி.மு.க
தொண்டர்களைப் பாராட்டுகிறேன்;
வாழ்த்துகிறேன்.

இந்தப் பழைய பாசமும் நாகரிகமும்
அரசியலைத் தாண்டி
திராவிட இயக்கங்களில்
தேனாகப் பரவட்டும்.

நெகிழ்கிறேன்; மகிழ்கிறேன்.
#கலைஞர்
@kalaignar89 எனத் தெரிவித்துள்ளார்.