மும்பையில் உள்ள பங்களாவை விற்கும் கங்கனா… பட ரிலீஸில் பிரச்சனையா?
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த படம் பற்றி பேசிய கங்கனா “படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்” எனத் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்துள்ளேன்.” எனக் கூறியிருந்தார். இந்த படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதன் பின்னர் தேதி ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 14 ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கங்கனா தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்ததால் அந்த தேதியில் இருந்து படம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது கங்கனா, மும்பையில் உள்ள தனது 40 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பங்களாவின் ஒருபகுதி மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.