“மகேஷ் பாபு சொன்னதுல தப்பு இல்ல”… கங்கனா ரனாவத் ஆதரவு!
நடிகர் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது நேர விரயம் என சொன்னது சர்ச்சைகளைக் கிளப்பியது.
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இதையொட்டி அவர் பத்திரிக்கையாளர்களை சமீபத்தில் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் இந்தி சினிமாக்களில் நடிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு “நிறைய இந்தி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு சினிமாவிலேயே எனக்கு நட்சத்திர அந்தஸ்தும், ரசிகர்களின் பேரன்பும் கிடைத்துள்ளது. அதைவிடுத்து இன்னொரு மொழியில் நடிப்பது பற்றி நினைப்பது கூட இல்லை. தெலுங்கிலேயே பெரிய படங்கள் பண்ணவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” எனக் கூறினார்.
மகேஷ் பாபுவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கு மகேஷ் பாபு விளக்கம் அளித்துள்ளார். அதில் “தான் எல்லா மொழி படங்களையும் நேசிக்கிறேன். எல்லா மொழிகளையும் மதிக்கிறேன். நான் இப்போது பணிபுரியும் இடத்திலேயே தொடர்ந்து பணியாற்றுவதையே சௌகர்யமாக உணர்கிறேன் என்று கூறியிருந்தேன். அது வேறுவிதமாக பரவி விட்டது” எனக் கூறி விளக்கம் அளித்தார்.
அவரின் இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர், “ மகேஷ் பாபுவின் கருத்தை அவர் தன்னுடைய துறை சார்ந்த மரியாதையை வெளிப்படுத்திய விதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது தலைமுறை தெலுங்கு சினிமாவை இந்தியாவின் நம்பர் 1 திரைப்படத் துறையாக மாற்றியுள்ளது. இப்போது, பாலிவுட் நிச்சயமாக அவருக்கானதை வழங்க முடியாது. இதை ஏன் பெரிய சர்ச்சையாக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று ஆதரவாக தெரிவித்துள்ளார்.