1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (08:48 IST)

கொரோனாவுக்கு பின் என்ன செய்ய போகிறோம்: கமல்ஹாசனின் நீண்ட அறிக்கை

சமீபகாலமாக கமல்ஹாசனின் அறிக்கை என்றால் பக்கம் பக்கமாக இருக்கும் என்பது தெரிந்ததே. சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தை யாராவது முழுவதும் படித்திருப்பார்களா? என்ற சந்தேகத்தை பலர் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு நீண்ட அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கொரோனாவுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய அறிக்கை பின்வருமாறு:
 
கொரோனா வைரஸ் ஆரம்பித்ததில் இருந்தே அவ்வப்போது தனது கருத்தை தெரிவித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே ஒரு நீண்ட கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள நிலையில் தற்போது கொரோனாவுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
இரண்டாம்‌ உலகப்போருக்குப்‌ பின்‌ மனித இனத்துக்கு வந்திருக்கும்‌ இந்த பேராபத்தை எதிர்கொள்ள நம்மை ஆள்பவர்கள்‌ எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள்‌, எப்படிக்‌ கையாளப்‌ போகிறீர்கள்‌ என்ற கேள்விகளுடன்‌ நமது பிரதமருக்கு நான்‌ எழுதிய கடிதத்திற்கான வரவேற்புக்கு நன்றி. இந்திய திருநாட்டின்‌ பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில்‌ நடக்கிறதா என கண்காணிக்கும்‌ பொறுப்பு நம்முடையது, ஏனெனில்‌ அதிகாரத்தை வழங்கியவர்கள்‌ நாம்‌. அந்த கடமையை நாம்‌ தொடர்ந்து செய்வோம்‌. ஆனால்‌ இந்த கட்டுரை கொரோனா நோய்‌ தொற்றை நாம்‌ முறியடித்த பின்னர்‌, இந்த ஊரடங்கு பாதிப்பால்‌ வரும்‌ பொருளாதார பிரச்சினைகளால்‌,நம்‌ தேசம்‌ எதிர்கொள்ளப்‌ போகும்‌ கேள்விகளைப்‌ பற்றியது.
 
நிலைமையை கையாண்ட விதத்தைப்‌ பற்றி விமர்சனங்கள்‌ இருந்தாலும்‌, கட்சி பேதங்களை விடுத்து அனைத்து மாநில அரசுகளும்‌ ஒன்றுடன்‌ ஒன்று இணைந்தும்‌, மத்திய அரசுடன்‌ கைகோர்த்தும்‌ செயல்படுவது, வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த ஆரோக்கியமான பழக்கம்‌, கொரோனா பாதிப்புக்கு புலம்பெயர்‌ தொழிலாளர்‌ பிரச்சினை, பெண்கள்‌ பாதுகாப்‌பு, சுகாதார பிரச்சினைகள்‌ ஆகிய நீண்ட கால பிரச்சினைகளுக்கு சுமூகமான முடிவுகளை எட்ட வேண்டும்‌ என்பது என்‌ ஆசை. சுகாதாரம்‌ என்று சொல்லும்‌ போது, கொரோனாவுக்கு பின்‌ இந்தியாவை புனரமைக்கும்‌ திட்டத்தில்‌ முதலில்‌ நாம்‌ கவனம்‌ செலுத்த வேண்டியது சுகாதாரத்துறையின்‌ மேல்‌ தான்‌.
 
இந்தியா முழு வீச்சில்‌ போரில்‌ ஈடுபட்டது 50 ஆண்டுகளுக்கு முன்னர்‌. ஆனால்‌ சுகாதாரமில்லாததால்‌ உயிரிழப்பவர்கள்‌, வருடத்துக்கு 16 இலட்சம்‌ பேர்‌. இந்த நிலையிலும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ நாட்டின்‌ பாதுகாப்புக்கான நிதி என்பது நாட்டின்‌ ஆரோக்கியத்தை பாதுகாக்கும்‌ நிதியை விட அதிகரித்துக்‌ கொண்டே செல்கிறது.
 
2020-21ஆம்‌ ஆண்டுக்கான பட்ஜெட்டில்‌ நமது நாடு பாதுகாப்புக்கு ஒதுக்கியிருப்பது ₹471,3/8 கோடிகள்‌. இந்தியாவின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ சுமார்‌ 2%. ஆனால்‌ நம்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்துவத்துறைக்கான நிதி, 1 சதவிகிதத்தை சுற்றித்தான்‌ கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்துவத்துறைக்கு 8% , பாதுக்காப்புக்கு 3.1% நிதி ஒதுக்குகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள்‌ அனைத்துமே இந்த முறையில்‌ தான்‌ நிதியை ஒதுக்குகிறார்கள்‌. ஆனால்‌ எனது நாட்டில்‌ இன்னும்‌ பாதுகாப்புத்துறையின்‌ நிதி ஒதுக்கீட்டையே, சிறப்பான அரசின்‌ செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது.
 
உண்மையான தேசப்பற்று என்பது முதலில்‌ ஒட்டு மொத்த தேசத்தின்‌ ஆரோக்கியத்தை காப்பதில்‌ பெருமை கொள்வதே ஆகும்‌. அதன்பின்‌ தான்‌ பொருளாதரமும்‌, பாதுகாப்புத்துறையும்‌ இருக்க வேண்டும்‌. உடல்‌ நலத்திலும்‌, சுகாதாரத்திலும்‌ அக்கறை இல்லாத நாடு, நமது இராணுவத்தின்‌ வீரத்தையும்‌, ஆற்றலையும்‌ காட்டி போருக்கு தயார்‌ என்று அறைகூவுவது கொலை குற்றத்துக்கு சமமாகும்‌.
 
தயார்‌ நிலையில்‌ இருக்கும்‌ பாதுகாப்புத்துறை நாட்டிற்கு நல்லது என்றாலும்‌, வைரஸ்‌, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள்‌ அதை பொருட்படுத்தாது. அதனால்‌ தான்‌ இந்தியா பேரிடர்‌, பெருநோய்‌ காலத்திற்கென, அதிகப்படியான நிதியை தனியாக ஒதுக்கீடு செய்து முன்னேற்பாடுகளை செய்வது உடனடி தேவையாகிறது.
 
வல்லரசாகும்‌ கனவையும்‌, பெரும்‌ மக்கள்‌ தொகையும்‌ கொண்ட நாடு தனது சுகாதாரத்தை காக்கும்‌ பொறுப்பில்‌ இவ்வளவு பலவீனமாக இருக்க கூடாது. எல்லைக்கு அப்பால்‌ இருக்கும்‌ ஆபத்தை விட, நாட்டின்‌ உள்‌ இருக்கும்‌ ஆபத்துக்கள்‌ பெரிது. சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்துவத்துறைக்கு அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி நாட்டை புனரமைப்பது, என்பது நமது முக்கியமான பணியாகும்‌.
 
 கொரோனாவுக்குப்‌ பின்‌ இயங்கப்‌ போகும்‌ உலகம்‌, இந்தியாவின்‌ புகழ்பெற்ற விவசாயத்துறைக்கு ஒரு மிகப்பெரும்‌ வாய்ப்பு. திரு. காந்தி அவர்கள்‌ சொன்னது போல கிராமங்களில்‌ தான்‌ இந்தியாவின்‌ உயிர்‌ உள்ளது. கொரோனாவாலும்‌, பொருளாதார மந்த நிலையாலும்‌, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள்‌ தங்கள்‌ சொந்த ஊருக்குதிரும்பிச்‌ சென்றுள்ளனர்‌.நகர்ப்புற வேலைவாய்ப்புக்கள்‌ குறைந்த இந்த நிலையை,மாநில அரசுகள்‌, உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித்‌ தந்தால்‌, அவர்களின்‌ வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன்‌, மாநிலங்களின்‌ வளர்ச்சியை அதிகப்படுத்தும்‌ வாய்ப்பாக பயன்படுத்தலாம்‌. இந்தியாவின்‌ புகழ்பெற்ற விவசாயம்‌, வளர்ந்து வரும்‌ விஞ்ஞான தொழில்நுட்பங்களையும்‌ இணைக்க வேண்டிய நேரம்‌ இது.
 
உலக அளவில்‌ விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதில்‌ இரண்டாம்‌ நிலையில்‌ இருக்கும்‌ நம்‌ நாடு, ஏற்றுமதியில்‌ முதலிடத்தில்‌ இருக்கும்‌ சீனா செய்வதில்‌ பாதி அளவே செய்கிறோம்‌ என்பது, நமது விவசாய வளர்ச்சியின்‌ இடைவெளியை காண்பிக்கிறது. தரைதட்டிப்‌ போன வளர்ச்சி, விவசாயக்கடன்‌, நீர்‌ மேலாண்மை, நிலையில்லா விவசாய வருமானம்‌ போன்றவை அடுத்த தலைமுறை விவசாயிகளை, விவசாயத்திடம்‌ அண்ட விடாமல்‌ வெகுதொலைவு விலக்கி வைத்து விட்டது. பசுமை புரட்சிக்குப்‌ பின்‌ பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல்‌ விட்டிருந்த விவசாயத்துறையின்‌ வளர்ச்சிக்கான நேரம்‌ இது. பசுமைப்புரட்சிக்குப்‌ பின்‌ நமக்கு இப்போது தேவைப்படுவது பசுமை* (மோர்‌) புரட்சி. அதாவது விவசாயமும்‌, விவசாயம்‌ சார்ந்த அனைத்து துறைகளிலும்‌ தேவைப்படும்‌ புரட்சி.
 
இந்திய நாட்டில்‌ விவசாயத்துக்கு தேவைப்படும்‌ முதன்மையான விஷயம்‌, வறண்டு போய்‌, கவனிக்கப்படாமல்‌ விடப்பட்டிருந்த விவசாய நிலங்களை, விஞ்ஞானத்தின்‌ உதவியுடன்‌ மீண்டும்‌ விளைநிலம்‌ ஆக்குவது. அதன்பின்‌ போர்க்கால அடிப்படையில்‌, நம்‌ உற்பத்தித்‌ திறனை முழுவீச்சில்‌ அதிகப்படுத்துவது. விவசாயத்தைச்‌ சார்ந்த சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழிலை ஆதரித்து தொழில்‌ முனைவோரை ஊக்குவிப்பது, நமது இளைய தலைமுறையினரை விவசாயத்தின்‌ பக்கம்‌ கொண்டு வருவதோடு, உழவு நேரம்‌ தவிர வருடத்தின்‌ பிற காலங்களில்‌ விவசாய தொழிலாளர்கள்‌ வேலையின்றி இருப்பதை தவிர்க்க முடியும்‌.
 
விவசாயத்துறையில்‌ வேலை செய்பவர்களில்‌ 80% பெண்கள்‌. பசுமைர* புரட்சியினால்‌, நடவு, அறுவடை காலம்‌ தவிர பிற காலங்களில்‌ ஏற்படும்‌ வருமான இழப்பைத்‌ தடுப்பது, தனிப்பட்ட பெண்கள்‌ பொருளாதாரத்தை மட்டுமல்ல, வீட்டின்‌ மற்றும்‌ நாட்டின்‌ பொருளாதாரத்துக்கும்‌ மிகப்பெரிய ஊக்கம்‌ அளிக்கும்‌. பொருளாதாரப்‌ புரட்சிக்கு, விவசாய வளர்ச்சியை விட சிறந்த தொடக்கம்‌ கிடைக்காது. உழவுக்கு வந்தனை செய்யும்‌ நேரம்‌ இது.
 
இந்தியாவின்‌ பொருளாதாரத்தை வலுப்படுத்தும்‌ உழைக்கும்‌ மக்களில்‌ 80% அமைப்பு சாரா தொழிலாளர்கள்‌. ஐரோப்பிய யூனியனின்‌ 14%, வடக்கு அமெரிக்காவின்‌ 20% , கிழக்கு ஆசியாவின்‌ 26% (சீனா தவிர்த்து), சீனாவின்‌ 50-60% உடன்‌ பார்க்கும்‌ போது, இந்தியாவை உலக அளவில்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ 5வது நாடாக உயர்த்தியிருக்கும்‌, இந்த மிகப்பெரும்‌ சக்தியை நாம்‌ கவனிக்கத்‌ தவறிவிட்டோம்‌ என்பது தான்‌ வேதனையான விஷயம்‌. வேலைக்கான உத்தரவாதமோ, தொழிலாளர்‌ நல விதிகளின்‌ பாதுகாப்போ, ஓய்வூதியமோ, காப்பீட்டுத்‌ திட்டமோ, விடுமுறையோ இன்றி பொருளாதாரத்தை கட்டமைக்கும்‌, இவர்கள்‌ நலனில்‌ அக்கறை கொண்டு ஒழுங்குபடுத்துதல்‌ என்பது இன்னும்‌ நடக்கவேயில்லை.
 
இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துவது என்பதை, தேசிய நடவடிக்கையாக அரசு ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான பணி. உத்தரவாதமின்றி உழைக்கும்‌ அவர்களுக்கு இது முன்னேற்றத்தின்‌ வழி. அத்துடன்‌ வருமான வரி செலுத்துபவர்களின்‌ எண்ணிக்கையையும்‌, வரிப்பணத்தையும்‌ இது அதிகப்படுத்தும்‌. அந்த நிதி மீண்டும்‌ அவர்களின்‌ நலத்திட்டங்களுக்கும்‌, கட்டமைப்பை தரம்‌ உயர்த்தவும்‌ பயன்படுத்தலாம்‌, அதே நேரத்தில்‌ வீட்டிற்குள்‌ அயராது உழைக்கும்‌, இல்லத்தரசிகள்‌ மீதான நம்‌ சமூகப்பார்வையும்‌ மாற வேண்டும்‌. வீட்டின்‌ வேலைகளும்‌,பொருளாதாரத்துக்கு முக்கியமான வேலை தான்‌ என்று, அவர்கள்‌ செய்யும்‌ பணிக்கு அங்கீகாரம்‌ வழங்க வேண்டும்‌. செலவினங்கள்‌ போக மீதமிருக்கும்‌, மிகக்குறைந்த பட்ச சேமிப்பை, தனது சாதனையாக வைத்திருக்கும்‌ இல்லத்தரசிகளுக்கு, வீட்டில்‌ அவர்கள்‌ செய்யும்‌
வேலைக்கே ஊதியம்‌ என்பது அவர்கள்‌ சேமிப்பை உறுதி செய்யும்‌. சேமிப்பு என்பது எல்லா வகையான நெருக்கடி நேரங்களிலும்‌ உதவக்‌ கூடியது.
 
நம்‌ நாட்டின்‌ பல்வேறு இடங்களில்‌ இருக்கும்‌ புலம்பெயர்‌ தொழிலாளர்கள்‌ வருமான சமத்துவமின்மையின்‌ கோர முகத்தின்‌ விளம்பரங்கள்‌. சொந்த ஊருக்கு செல்ல வேண்டும்‌ என்ற கோரிக்கையோடு அவர்கள்‌ வீதிகளுக்கு வந்தது விடுமுறையை கொண்டாடுவதற்கு அல்ல, ஒரு வேளை உணவுக்கு உத்தரவாதமில்லாமல்‌, மாட்டிக்‌ கொள்வதில்‌ இருந்து தப்பிப்பதற்கு.
 
உண்பதற்கு ஒரு வேளை உணவும்‌, ஒதுங்குவதற்கு இடத்தையும்‌ பெறுவதற்கு பணமில்லை என்ற பயம்‌ அவர்களின்‌ தவறல்ல. அவர்களுக்கு அந்த வசதியைக்‌ கூட செய்து தராமல்‌, குப்பைத்தொட்டியில்‌ கிடக்கும்‌ அழுகிய பழங்களை எடுத்து உண்ணும்‌ நிலைக்கு அவர்களை கொண்டு சென்றிருப்பது நம்‌ அரசின்‌, சமுதாயத்தின்‌ தவறு. வருமானத்தில்‌ சமத்துவமின்மை உலகம்‌ முழுவதும்‌ இருக்கும்‌ பிரச்சினை தான்‌ என்றாலும்‌ அதன்‌ கொடிய வேர்கள்‌, நம்‌ நாட்டில்‌ வெகு ஆழமாக ஊன்றி இருக்கிறது. புள்ளி விவரங்களை நம்ப வேண்டுமென்றால்‌, நம்‌ நாட்டின்‌ பொருளாதாரத்தில்‌ 77% சொத்துக்கள்‌, 10% மக்களின்‌ கையில்‌ உள்ளது. இந்த சமத்துவமின்மை சரிசெய்யப்பட வேண்டும்‌. ஆனால்‌ அது பெரும்பணக்காரர்களின்‌ சொத்துக்களை பறித்து சரி செய்யப்படக்‌ கூடாது. அடித்தட்டில்‌ இருக்கும்‌ மக்களின்‌ பொருளாதார
நிலையினை புரட்சிகரமான பொருளாதாரத்‌ திட்டத்தினால்‌ வலுப்படுத்தி அவர்கள்‌ வாழ்க்கை நிலையை உயர்த்துவதால்‌ மட்டுமே சரி செய்யப்பட வேண்டும்‌. இந்தியாவின்‌ மிகப்பெரிய சவால்‌, வறுமை தான்‌ என்பதை கொரோனா, மீண்டும்‌ உறுதி செய்திருக்கிறது. பணக்காரர்கள்‌ பாதிக்கப்படுவார்கள்‌, ஆனால்‌ பட்டினியால்‌ உயிரிழக்க மாட்டார்கள்‌.
 
நம்‌ தலைவர்கள்‌ எளிய மனிதனின்‌ பிரச்சினைகளையும்‌, தேவைகளையும்‌ கவனத்தில்‌ கொண்டு தேசத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்‌. நிவாரண உதவிகள்‌ என்பது நடந்த தவறுகளை ஈடுகட்டும்‌ முயற்சி தான்‌ என்பதை புரிந்து செயல்பட வேண்டும்‌. ஒருபுறம்‌ மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று, மறுபுறம்‌ இந்தியாவிற்கு, கடந்த கால தவறுகளைத்‌ திருத்திக்‌ கொண்டு, வளர்ந்த நாடாக முன்னிற்கும்‌ பெரும்‌ வாய்ப்பையும்‌ , வழங்கி இருக்கிறது. கமல்‌ ஹாசன்‌ ஆகிய நான்‌, வளமான வாழ்க்கை எல்லோருக்கும்‌ என்ற நிலைப்பாடுடன்‌, தனிமனிதனின்‌ சுகாதார மற்றும்‌ பொருளாதார அடிப்படைகளைத்‌ தீர்த்து வைக்கும்‌, புரட்சிகரமான திட்டத்துடன்‌, எனது சொந்த மாநிலமான தமிழகத்தை புனரமைக்க உறுதி கூறுகிறேன்‌. ஒவ்வொரு மாநிலமும்‌ இந்த முயற்சியை கையில்‌ எடுத்து, பிற மாநிலங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டால்‌, தரமான சுகாதாரம்‌, பொருளாதார மற்றும்‌ சமூக சமத்துவம்‌, வளமான வாழ்வு என உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா திகழும்‌ நாள்‌
வெகுதொலைவில்‌ இல்லை.
 
வல்லரசு என்ற இந்தியாவின்‌ பல்லாண்டுக்‌ கனவை, தூசி தட்டி எடுத்து, அதை நோக்கி பயணிக்கும்‌ நேரம்‌ இது. உலக நாடுகள்‌ அனைத்துக்கும்‌ முன்‌ மாதிரியாக, நம்பிக்கையின்‌ முன்னோடியாக, சிலருக்கு புரியும்படி சொல்வதென்றால்‌, சரியான காரணங்களுக்காக, விஷ்வ-குருவாக மாறுவோம்‌.
 
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.