வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (18:21 IST)

ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி டிஜிட்டலில் வெளியாகிறது

ஜெயலலிதா, முத்துராமன், மனோரமா, சோ நடிப்பில் 1973 -இல் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரியகாந்தி. 43 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தை டிஜிட்டலில் மீண்டும் வெளியிடப் போவதாக இயக்குனர் முக்தா சீனிவாசன் தெரிவித்தார்.


 

அவர்தான் சூரியகாந்தி படத்தை இயக்கியவர். இது குறித்து பேசிய அவர், "நான் சினிமாவுக்கு வந்து 70 வருடங்கள் ஆகிவிட்டன. முதலாளி, தேன் மழை, நிறைகுடம், அருணோதயம், தவப்புதல்வன், அன்பைத்தேடி, அந்தமான் காதலி, இமயம், பொல்லாதவன், சிவப்பு சூரியன் உள்பட 42 படங்களை இயக்கி உள்ளேன். சூரிய காந்தி நான் இயக்கிய முக்கிய படங்களில் ஒன்று.
 
தன்னை விட மனைவி அதிகம் சம்பாதிப்பதை பார்த்து கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வருகிறது. இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளே படத்தின் கதை. எல்லோரும் சிறப்பாக நடித்து இருந்தனர். ஏ.எஸ்.பிரகாசம் திரைக்கதை வசனம் எழுதி இருந்தார். இன்றைய கால கட்டத்துக்கும் பொருந்துகிற கதையம்சம் உள்ள படமாக இருக்கிறது. எனவேதான் மீண்டும் திரைக்கு கொண்டு வருகிறோம்" என்றார்.
 
இந்தப் படத்தில்தான், கண்ணதாசனின், பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா... பாடல் இடம்பெற்றது. ஜெயலலிதாவும், மனோரமாவும் இதில் சொந்தக்குரலில் பாடியிருப்பது இன்னொரு சிறப்பு.