1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (16:32 IST)

டைட்டிலுக்கு எதிர்ப்பு: கமலுக்கு கோரிக்கை வைத்த எழுத்தாளரின் வாரிசுகள்!

ஜெயகாந்தன் எழுதிய புகழ்பெற்ற நாவல் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது என்பதும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்  இந்த டைட்டிலை திரைப்படத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்றும் ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
மதிப்புக்குரிய கமல்ஹாசனுக்கு,
 
ஜெயகாந்தனின் புதல்வர்கள் ஜெ.காதம்பரி, ஜெ.ஜெயசிம்மன், ஜெ.தீபலட்சுமி ஆகியோர் எழுதுவது.
 
தமிழ் இலக்கிய உலகில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஒரு மைல்கல்.
 
சனாதனம் அதுவரை எழுதி வைத்திருந்த விதியை, பழக்கி வைத்திருந்த சமூகத்தை கேள்வி கேட்டு புதிய பார்வையையும், வெளிச்சத்தையும் தந்த 'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையின் தொடராக எழுந்த நாவல் அது. தமிழ்ச் சமூகத்தில் பெரும் விவாதங்களையும், உரையாடல்களையும் எழுப்பிய கதை அது.
 
அதன் தனித்துவத்தைப் போற்றுவதும், காப்பாற்றுவதும் தமிழ் இலக்கிய உலகின் பொறுப்பும், கடமையும் ஆகும் என நினைக்கிறோம். எழுத்தாளர் ஜெயகாந்தனையும், அவரது எழுத்துகளையும் உண்மையாக மதிப்பவர்களும், நேசிப்பவர்களும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்.
 
மேலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்பது ஒரு பழைய திரைப்படத்தின் தலைப்பு மட்டுமல்ல. இலக்கிய வாசகர்களாக இல்லாதவர்களுக்கும் கூட ஜெயகாந்தன் என்ற பெயரும் அதன் தொடர்ச்சியாய்ச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற சொற்றொடரும் பிரிக்க இயலாதபடி நினைவில் பதிந்து போனவை. அதனாலும் வேறு எந்தப் படைப்புக்கும் அத்தலைப்பைப் பொருத்திப் பார்க்க மனம் ஒப்பவில்லை.
 
"இல்லாதவர்கள் பாவம், எடுத்துக் கொள்கிறார்கள்"
 
அவர் கதையையோ, பாத்திரப் படைப்பையோ யாராவது அவர் அனுமதியின்றித் திரைப்படங்களில் பயன்படுத்தி விட்டதாகத் தெரியவரும் போது அப்பா இப்படித்தான் பெருந்தன்மையோடு சொல்வார். அவரே சம்மதித்தாலும் நாம் அதைச் செய்யலாமா என்பது தான் இங்கு தார்மீக ரீதியாக எழும் கேள்வி.
 
2009இல் அப்பாவின் சம்மதத்தைப் பெற்றுத் தான் ‘உன்னைப் போல் ஒருவன்’ தலைப்பை எடுத்துக் கொண்டீர்கள் என்பதை அறிவோம். ஆனால் அதன் விளைவாக இன்று இணையதளத்தில் 1965-ல் வெளியாகி தேசிய விருது, பெருந்தலைவர் காமராஜரால் பாராட்டு, அன்றைய சோவியத் யூனியனில் திரையிடல் போன்ற பல சிறப்புகளைப் பெற்ற ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்' குறித்த அனைத்துத் தடயங்களும் 2009 திரைப்படத்தின் டிஜிட்டல் சுவடுகளால் மறைக்கப்பட்டுவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்களா?
 
அதே நிலை சாகித்ய அகாடமியின் விருது பெற்ற, நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது பெற்றுத் தந்த, இன்றளவும் பலரால் பேசப்பட்டு விரும்பி ரசிக்கப்படுகிற‌ ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கும் திரைப்படத்துக்கும் ஏற்படக் கூடாது என்று நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.
 
காப்புரிமை என்பது பொருள் ஈட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட உரிமை அல்ல‌. சொல்லப் போனால் அது இரண்டாம் பட்சமானது. காப்புரிமை என்பது படைப்பாளியின் படைப்புகளையோ அதன் தலைப்புகளையோ வேறொருவர் எடுத்துத் திரித்து வெளியிடுவதைத் தடுத்துக் காப்பது.
 
ஜெயகாந்தனின் மக்க‌ளான எங்களிடம் அந்த உரிமை இருக்கும் வரை இம்மாதிரியான செயல்களைச் சுட்டிக்காட்டி அவை நடைபெறா வண்ணம் தடுப்பதும் எங்கள் கடமையாகிறது.
 
ஆகவே, த‌ங்கள் முன்னிலையில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தலைப்பைத் தயவுசெய்து மாற்றி வேறு தலைப்பு வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
 
ஜூலை மாதம் அதன் அறிவிப்பு வந்தவுடனேயே இதற்கான எதிர்ப்பை எழுத்தாளர்கள் பிரபு தர்மராஜ், மலர்வண்ணன், பத்திரிகையாளர் கவின்மலர் உட்படப் பலரும் தெரிவித்திருந்தனர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
 
அப்பாவின் நல்ல நண்பர் என்பது மட்டுமல்லாது உலக நாயகன் என்று புகழப்படுகிற சிறந்த கலைஞர் என்ற முறையிலும் நீங்கள் எங்களது இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
 
இப்படிக்கு,
 
ஜெ. காதம்பரி
ஜெ. ஜெயசிம்மன்
ஜெ. தீபலட்சுமி
 
இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.