பேட்ட படத்துக்கு நடந்திருப்பது அநியாயம்! ஶ்ரீரெட்டி கொதிப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார் உள்பட பலர் நடித்துள்ள பேட்ட படம் நாளை வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். பேட்ட படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு என்டிஆர் வாழ்க்கை வரலாறு படம் மற்றும் ராம் சரண் தேஜாவின் வினய விதேய ராமா ஆகிய படங்கள் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதால் பேட்ட படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. குறைந்த திரையரங்குகளில் பேட்ட நாளை வெளியாகிறது.
இந்நிலையில் பேட்ட படத்தை வெளியிடவிடாமல் சிலர் தடுத்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார் நடிகை ஶ்ரீரெட்டி.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், பேட்ட படத்தை வெளியிடாமல் தடுக்கும் டோலிவுட் மாபியாக்களான சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங்க் , தில் ராஜு ஆகியோரை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. அவர்கள் பல சிறிய பட தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுயநலமாக செயல்படுவதால், ஆந்திராவில் பேட்டை படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அசோக் குருவில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கோபமாக ஶ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.