நடக்குமோ ? நடக்காதோ ? இளையராஜா 75 – ஆரம்பித்தது டிக்கெட் விற்பனை…
இளையராஜாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடக்க இருக்கும் இசை விழாவுக்கான டிக்கெட் விற்பனைத் தொடங்கியுள்ளது.
ஆயிரம் படங்களுக்கும் மேல் இசை, 5000 பாடல்கள், இசை ஆல்பங்கள், 4 தேசிய விருதுகள் எனத் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானாக இருந்து வருகிறார் இளையராஜா. அவரது 75 ஆவது பிறந்தநாள் கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதிக் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரைக் கவுரவிக்கும் விதமாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
அது போல இளையராஜாவைக் கவுரவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசை விழா ஒன்று பிப்ரவரி மாதம் 2, 3 ஆகியத் தேதிதிகளில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்க இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இளையராஜா தரவேண்டிய ராயல்டி தொகை 50 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் அதைக் கொடுக்காமல் இளையராஜா இழுத்தடிப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சார்பில் பி டி செல்வக்குமார் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதனால் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் இசை விழா நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் விழாவுக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்க துனைத் தலைவர் பார்த்திபன் கவனித்து வருகிறார். விழாவுக்கான டிக்கெட்கள் விறபனையை இன்று இளையராஜா தொடங்கி வைக்க முதல் டிக்கெட்டை நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக்கொண்டார். அது போல நிகழ்ச்சிக்கான லோகோவை ஃபெஃப்சி தலைவர் செல்வமணி வெளியிட்டார். இதனால் டிக்கெட் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் ராஜா ரசிகர்கள்.