ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (08:38 IST)

இளையராஜா பயோபிக்கில் பாரதிராஜா வேடத்தில் நடிக்கப் போவது யார்?

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் திரைக்கதைக்காக இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவோடு நெருக்கமாக பழகிய தமிழ் சினிமா நட்சத்திரங்களை சந்தித்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது முன்தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தில் இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த நபர்களின் வேடங்களில் நடிக்க உள்ள நடிகர்களுக்கான தேர்வும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த பஞ்சு அருணாச்சலம் வேடத்தில் அவரின் மகன் சுப்பு பஞ்சுவே நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல பாரதிராஜா வேடத்திலும் மனோஜ் பாரதி நடிக்க ஒப்பந்தமான நிலையில் இப்போது அவர் அதிலிருந்து வெளியேறியுள்ளாராம். அதனால் பாரதிராஜா வேடத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் கங்கை அமரன், அன்னக்கிளி செல்வராஜ், பாவலர் வரதராஜன் ஆகியோர் வேடங்களில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.