வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:37 IST)

அடித்துப் பாருங்கள் பார்க்கலாம், ராணுவமே வந்தாலும் கவலையில்லை: நடிகர் சிம்பு

தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் சென்னை மெரினா கடற்கரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அறப்போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் லண்டன் வாழ் தமிழர்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில்,  தமிழக சினிமா நட்சத்திரங்களும் ஆதரளிக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில்,  நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள தனது வீட்டிற்கு முன்னர் நேற்று இரவிலிருந்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள், ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சிம்பு,”ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்காக சென்னைக்கு  ராணுவம் வந்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. ராணுவம் வருவது குறித்தெல்லாம் நமக்கு பிரச்சனைகள் இல்லை. ஆனால் தமிழகம் முழுவதும் போராடி வரும் அவர்களை யாராவது தாக்கினால், அது மிகப்பெரிய பாவம். அவர்கள் அடி வாங்க வேண்டியவர்கள் கிடையாது. இந்த மண்ணின் புதல்வர்களை நாம் காப்பாற்ற வேண்டும்.
 
ராணுவமே வந்தாலும், இரவோடு இரவாக எங்கெல்லாம் தேசியக் கொடி இருக்கிறதோ, அதையெல்லாம் மெரினா கடற்கரையில்  இருப்பவர்களுக்கு உடனடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். தேசிய கொடி மேலிருந்தால், யார் அவர்களை தாக்க  முடியும்? தேசிய கொடி மேலே இருக்கும் போது, நீங்கள் அடித்துப் பாருங்கள் பார்க்கலாம்..!”. மேலும் தமிழர்களை சீண்டி  பார்க்க வேண்டாம்  என கொந்தளிப்பாக கூறினார். 
 
ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று இளைஞர்கள் வரலாறு காணாத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடதக்கது.