தங்கலான் ஏன் மக்களுக்கு connect ஆகலன்னு யோசிச்சிட்டு இருக்கேன்… பா ரஞ்சித் வருத்தம்!
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகிய தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தங்கலான் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழைப் போலவேதான் மற்ற மொழிகளிலும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இதனால் எதிர்பார்த்த வெற்றியைத் தங்கலான் பெறவில்லை. அதனால் பல மாதங்கள் கழித்துதான் ஓடிடியில் கூட ரிலீஸானது. ஆனாலும் விமர்சன ரீதியாக இந்த ஆண்டில் வெளியான ஒரு முக்கியமான படம் என்ற பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது தங்கலான் படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பா ரஞ்சித் “என்னால் இப்போது சார்பட்டா பரம்பரை படத்தில் இருந்து எளிதாக வெளியே வர முடிந்தது. ஆனால் தங்கலான் படத்தில் இருந்து என்னால் இன்னும் வெளியே வர முடியவில்லை. இன்னும் அந்த உலகத்திலேயேதான் இருக்கிறேன். அது ஏன் மக்களுக்கு அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.