வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:15 IST)

காசு கொடுத்து ஆஸ்கர் லைப்ரரியில் ராயன் திரைக்கதையை இடம்பெற வைத்தாரா தனுஷ்?

நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ராயன் கடந்த வாரம் வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படம் நல்ல வசூலைப் பெற்றாலும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதில் அதிகமும் விமர்சனங்களை சந்தித்தது படத்தின் திரைக்கதைதான். வடசென்னை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமான அம்சங்களும் இல்லை என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் லைப்ரரி தங்களுடைய சேமிப்பிற்காக தேர்வு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதை ஒரு பெருமையாகவும் சமூகவலைதளங்களில் பலர் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஆஸ்கர் லைப்ரரி எப்படி திரைக்கதைகளை தேர்வு செய்கிறது என்று தெரிந்தால் ராயன் திரைக்கதை தேர்வு செய்யப்பட்டதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்று தெரியவரும்.

ஒரு திரைக்கதையை பணம் கட்டி யார் வேண்டுமானாலும் ஆஸ்கர் நூலகத்தில் வைக்க விண்ணப்பிக்கலாம். அதற்கான கட்டணம் உண்டு. ஒரே ஒரு நிபந்தனை திரைக்கதை ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். மேலும் அதை நூலகத்தில் வைக்க நாம்தான் பணம் கட்டவேண்டும். அது இந்திய ரூபாய் மதிப்பில் 8000ரூ முதல் 15000 ரூபாய் வரை வேறுபடும். இந்த பணத்தைக் கட்டினாலே போதும் ஆஸ்கர் நூலகத்தில் உங்கள் திரைக்கதை இடம்பெற்றுவிடும். மற்றபடி தேர்வு செய்தல் என்ற செயல்முறையெல்லாம் அங்கே கிடையாதாம். இந்த திரைக்கதைகளை அந்த நூலக உறுப்பினர்கள் படித்துக் கொள்ளலாம்.