வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (18:41 IST)

அயோத்தி ராமர் ஆலயத்திற்கு புதிய பாணியில் நன்கொடை வழங்கும் 'ஹனு-மான்' படக் குழு!

Hanu Maan Poster
'ஹனு-மான் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடும் ரசிகர்களிடமிருந்து.. அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டண தொகையிலிருந்து ஐந்து ரூபாயை.. அயோத்தியில் எழுப்பப்பட்டு வரும் ராமர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்குகிறோம்' என அப்படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.


 
இந்த அறிவிப்பிற்கு 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி  வரவேற்பும், நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ராய், சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தாசரதி சிவேந்தரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌர ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஃபேன்டசி ஜானரில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். ஸ்ரீமதி சைதன்யா இதனை வழங்குகிறார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுதும் திரையரங்குகளில் 'ஹனு-மான்' வெளியாகிறது.

தமிழகம் முழுவதும் இந்த திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார்.

இந்நிலையில் படக் குழு தற்போது கொச்சி, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இதில் ஒரு நிகழ்வாக ஹைதராபாத்தில் ஃபிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது.

இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசியது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்றில் ஒரு மைல் கல் நிகழ்வாகும். இம்மாதம் 22 ஆம் தேதியன்று ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்திருக்கிறது.

இதில் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொள்வேன்.
ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு 'ஹனு-மான்' படக் குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இப்படத்தினை காண்பதற்காக விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாயை ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக வழங்குகிறார்கள்.

இந்த செய்தியை படக் குழு சார்பாக நான் மகிழ்ச்சியுடன் இங்கு அறிவிக்கிறேன். மேலும் இத்தகைய உன்னதமான முடிவை எடுத்த 'ஹனு-மான்' படக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

ராமர் ஆலயம் கட்டுவதற்காக 'ஹனு-மான்' படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாயை நன்கொடையாக வழங்கும் 'ஹனு-மான்' படக் குழுவினரை திரையுலகினர் மட்டுமல்லாமல் ஆன்மீக அன்பர்களும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.