1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (10:55 IST)

வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா.. ‘பருத்தி வீரன்’ பிரச்சனை முடிந்தது..!

கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் திரைப்படம் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஞானவேல் ராஜா அமீர் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார்

இதற்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

  ‘பருத்தி வீரன்’பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதைப்பற்றி பேசியதில்லை, என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன்.

ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்’

இந்த அறிக்கையை அடுத்து அமீர், ஞானவேல் ராஜா இடையிலான பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

Edited by Siva