1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (18:19 IST)

பருத்தி வீரனுக்கு முன்பே அமீர் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்: பாரதிராஜா

’பருத்திவீரன்’ பிரச்சனை குறித்து ஏற்கனவே தமிழ் திரை உலகில் உள்ள பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜாவும் தனது சமூக வலைதளத்தில் ஞானவேலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
 திரு ஞானவேல் அவர்களே உங்களுடைய காணொளியை பார்க்க நேரிட்டது. ’பருத்திவீரன்’ திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதாரப் பிரச்சனையை சார்ந்தது மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும்  பெயருக்கும் படைப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 
 
உங்களை திரை துறையில் அடையாளப்படுத்தி மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்து விட வேண்டாம்.  ’பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி அதில் ஒன்றை தயாரித்து உள்ளார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும். 
 
ஏனெனில் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக் கொண்டுதான் இருப்பார்கள்.  நான் இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மிகச்சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும் அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சனையை சமூகமாக பேசி தீர்ப்பது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ 
 
இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran