புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 10 மே 2023 (16:12 IST)

திருமணத்திற்கு முன் மணமகனின் உண்மையான குணத்தை அறிந்து கொள்ள இந்தச் சோதனை உதவுமா?

திருமணத்திற்கு முன்பாக மணமகன், மணமகளின் ஜாதகத்தை கேட்பது இந்திய பெற்றோர்கள் மத்தியில் வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் சிலர் கைரேகையை கேட்பது எதனால் தெரியுமா?
 
ஆம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் திருமணத்திற்கு முன்பு மணமகனின் கைரேகையை சிலர் கேட்கின்றனர். இவற்றை வழக்கமான கைரேகை நிபுணர்களிடம் சென்று காட்டாமல் ஒரு கருவி மூலமாக சோதிக்கப்படுகிறது. இந்த சோதனையின் பெயர் DMIT என்று அழைக்கப்படுகிறது.
 
மணமகனின் குணநலன்கள், புத்திசாலித்தனம் போன்ற பல அம்சங்களை இந்த சோதனையின் மூலமாக கண்டறிய முடியும் என்று இதை ஏற்பாடு செய்துள்ள ராஜ்கோட் யுவ படிதார் சமாஜ் கூறுகிறது.
 
ஆனால் இந்த சோதனை அறிவியல்பூர்வமானது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
திருமணத்திற்கு முன் மணமகனின் கைரேகை ஏன் எடுக்கப்படுகிறது? அந்தச் சோதனையின் மூலம் என்னென்ன உண்மைகள் தெரியவரும்? எப்படி அந்த சோதனை நடக்கிறது?
 
DMIT சோதனை என்றால் என்ன?
DMIT என்பது Dermatoglyphics Multiple Intelligence Test என்பதன் சுருக்கம். இது ஒரு கைரேகை சோதனை. இதை Brainwonders என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
 
இந்த சோதனையின் மூலம் ஒருவரின் கைரேகைகளைக் கொண்டு அந்த நபரின் புத்திசாலித்தனத்தை மதிப்பிட முடியும் என்று இதை உருவாக்கிய நிறுவனம் கூறுகிறது.
2016ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள சில பள்ளிகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வந்தன.
 
எந்த பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம்? எதிர்காலத்தில் மாணவர்கள் என்னவாக வேண்டும்? என பல கணிப்புகளை மேற்கொள்ள மாணவர்களின் கைரேகைகள் பயன்படுத்தப்பட்டதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
சில தனியார் நிறுவனங்களும், வேலைக்கு ஆள் எடுக்கும் போது ஊழியர்களின் கைரேகையை வைத்து, DMIT சோதனையின் அடிப்படையில் வேலைக்கு எடுக்கப்பட்டனர்.
 
விமர்சனத்திற்குள்ளான சோதனை
 
 
2019ஆம் ஆண்டு இந்திய மனநல நிபுணர்கள் சங்கம் (IPS) சார்பாக DMIT சோதனை குறித்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
அதில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இதுபோன்ற சோதனைகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியது.
 
DMIT-க்கு பின்னால் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று அது கூறியது.
 
இந்த சோதனைகள் குறித்து இந்திய மனநல நிபுணர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மிருகேஷ் வைஷ்ணவ் பிபிசியிடம் பேசினார்.
 
“கடந்த காலங்களில், சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சோதனையை நடத்தியதாக செய்திகள் வந்தன. இவை மாணவர்களின் ஆளுமை, உயர்கல்வி விருப்பத்தை கணிக்க பயன்படுத்தப்பட்டது,'' என்றார்.
 
“இத்தகைய சோதனைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. இந்த சோதனையில் தெரியவரும் முடிவுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று அவர் கூறினார்.
 
DMIT சோதனை தொடர்பாக இந்திய மனநல நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுருந்த அறிக்கையில், "DMIT சோதனையால் ஒரு நபரின் புத்திசாலித்தனத்தை, மூளையின் செயல்பாட்டை, புத்திக்கூர்மையை மதிப்பிட முடியாது," என்று கூறப்பட்டது.
 
ஆயினும், ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் மல்டிடிசிப்ளினரி ரிசர்ச்சில் வெளிவந்த ஒர் ஆய்வுக் கட்டுரையில், "ஒரு நபரின் கைரேகைக்கும் அவரது புத்திகூர்மைக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று 1823ஆம் ஆண்டு முதல் விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
DMIT அடிப்படையில் திருமணம் செய்யலாமா?
 
தற்போது இந்த சோதனைகளை ராஜ்கோட்டிலுள்ள யுவ படிதார் அமைப்பு செய்து வருகிறது. அதன் தலைவர் வினோத்பாய் தேசாய் பிபிசியிடம் பேசினார்.
 
"கைரேகைக்கும், மூளையின் பகுதிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக டாக்டர் ஹாரோல் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார். அவரது கோட்பாடுகளின் அடிப்படையிலேயே DMIT சோதனை செயல்படுகிறது," என்றார் வினோத்பாய்.
 
தொடர்ந்து பேசிய அவர், "சமீபத்தில் என் பிறந்தநாளுக்காக 21 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். ஆனால் இது மற்ற திருமணங்களிலிருந்து வேறுபட்டது," என்றார்.
 
“வழக்கமான திருமணம் செய்யும் முன்பு மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பொருத்தம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள ஜாதகம் பயன்படுத்தப்படும். ஆனால் நாங்கள் DMIT சோதனை மூலமாக பொருத்தத்தை சோதித்தோம்.“
 
இந்த சோதனை இப்போது எங்கள் சமூகத்தில் மட்டும் பயன்படுத்துகிறோம். ஆனால் விரைவிலேயே இதை அனைத்து சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளதாக கூறினார்.
 
11 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு திருமணம் நடந்ததாகவும், தனது மனைவியை DMIT சோதனை மூலமாகவே உறுதி செய்ததாக வினோத்பாய் தெரிவித்தார்.
 
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதுபோன்ற சோதனைகள் விளம்பரத்திற்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும், இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என மனநல மருத்துவர் ஹிமான்ஷு சௌகான் கூறுகிறார்.
 
மருத்துவரான யோகேஷ் படேலும், "இந்த சோதனைக்கு அறிவியல் ரீதியாக எந்த சான்றுகளும் இல்லை" என்று டாக்டர் சௌகானின் கருத்துகளை ஏற்றுக்கொண்டார்.
 
கைரேகை மூலம் ஒரு நபரின் புத்திசாலித்தனத்தை எவ்வாறு மதிப்பிட முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
 
DMIT சோதனையின் அடிப்படையில் உயர்கல்வியில் எந்த பாடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த சோதனையின் அடிப்படையில் இத்தகைய முடிவுகளை எடுக்கக்கூடாது, என டாக்டர் சௌகான் கூறுகிறார்.
 
“இந்தச் சோதனைக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் இல்லை. உண்மையில், திருமணத்திற்கு முன்பு நோய் அபாயம் உள்ளதா என்பதை அறிய மரபணு, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.”