எதிர்கால இந்தியா எப்படி இருக்கும்? - டிஸ்கவரியின் ‘இந்தியா 2050’
பருவநிலை மாற்றத்தை உலகமே எதிர்கொண்டு வரும் சூழலில் இந்தியா அதில் எந்த விதத்தில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை விவரிக்கும் ஆவணப்படமாக ‘இந்தியா 2050’ உருவாகியுள்ளது.
உலகமெங்கும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இயற்கை சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் பருவநிலை மாற்றத்தால் வேகமாக பாதிக்கப்பட்டு வரும் முக்கியமான நாடுகளில் இந்தியாவும் உள்ளது. வல்லரசு கனவுகளில் ஆழ்ந்து வரும் இந்தியா பருவநிலை மாற்றத்தை கண்டு கொள்ளாது போனால் என்ன விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.
2050ம் ஆண்டில் ஜெய்ப்பூரில் தொடங்கும் காட்சி வெறும் பாலைவனத்தை காட்டுகிறது. எதிர்காலத்தில் ஜெய்ப்பூர் வெறும் பாலைவனமாகவே இருக்கும் என கூறுகின்றனர். டெல்லியில் காற்று மாசுபாடு, பெங்களூர் மற்றும் சென்னை தண்ணீர் தட்டுப்பாடு, ஒடிசா கடலோர பகுதிகளில் கடல் உட்புகுதல் என எதிர்காலத்தில் இந்தியா சந்திக்கபோகும் சவாலான பேரிடர்களை குறித்து விளக்குகிறது இந்த ஆவணப்படம். இதிலிருந்து நம்மை காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சமூக, சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்துகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆவணப்படம் டிசம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இதுகுறித்த செய்திகளை பகிர்ந்துள்ள சுற்றுசூழல் ஆர்வலர்கள் புதிய ஆண்டு இயற்கை குறித்த புரிதலோடு புதியதாக தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.