செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (16:39 IST)

தமிழ் சினிமாவில் வியக்கவைக்கும் கலைஞர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது – கொட்டுக்காளி குறித்து இயக்குனர் பாலா!

கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ், தன்னுடைய இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்புகளையும் பாராட்டுகளையும் பெற்ற இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலா படத்தை பாராட்டி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் “நம்முடைய தமிழ் சினிமாவில் இருந்து உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் என்பதற்கு முக்கிய சான்றுகளில் ஒன்று இந்த கொட்டுக்காளி. ஆழமான இக்கதையை எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ்.
குறிப்பாக சூரி, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டமும், அமைதியும் ஒருசேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராக திரையுலகில் ஆழச்சுவடு பதித்து தாண்டவமாடியுள்ளார் என்றால் அது மிகையாகாது. படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில் மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி அன்னா பென்.

படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கியக் கதாபாத்திரம்தான் என்று சவால்விட்டுள்ளார்கள். காட்சியை வழிநடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு வினோத் ராஜ் சார்பாக எனது நன்றிகள். சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கைகூப்பி வணங்கத்தக்கக் கலைஞர்கள். கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்” எனப் பாரட்டியுள்ளார்.